இன்றைக்கு மாறிவரும் உணவு பழக்கங்களால் பல உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக தேவையில்லாத உணவுகளை நாம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பு என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த சூழலில் தான் எப்படியாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருப்பது, வாக்கிங், ஜாக்கிங், ஜிம்மிற்கு செல்வது போன்ற பல்வேறு விஷயங்களை மக்கள் மேற்கொள்கின்றனர்.
இருந்த போதும் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நாம் தீவிர டயட்டில் இருந்தாலும் சில நேரங்களில் ஸ்நாக்ஸ் அல்லது இனிப்புகள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றக்கூடும். இதுப்போன்ற சூழ்நிலை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற நேரத்தில் பழங்கள் அல்லது காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் ஜூஸ்களை நீங்கள் பருகலாம். இதோ உடல் எடைக்குறைப்பிற்கு உதவும் ஜுஸ்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
ஆரஞ்சு ஜூஸ் : பூஜ்ஜிய கலோரி கொண்ட பழங்களில் ஒன்றாக உள்ளது ஆரஞ்சு. இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துகள் இருந்தாலும் தேவையற்ற கலோரிகளை எரிக்கும் சக்தி ஆரஞ்சிற்கு உள்ளது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் உங்களது அன்றாட உணவில் ஆரஞ்சை பழமாகவோ அல்லது ஜுஸாகவோ செய்து சாப்பிடலாம்.
கேரட் ஜூஸ் : வைட்டமின்கள் சி, கே, ஏ, நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் பல்வேறு தாதுப்பொருள்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று கேரட். இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். உங்களால் உணவில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் ஜூஸாக செய்து சாப்பிடலாம். இவற்றில் குறைந்த கலோரிகள் உள்ளதால் எடை இழப்பிற்கு உதவியாக உள்ளது. மேலும் கேரட்டில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் எளிதில் உணவுகள் ஜீரணமாக உதவியாக உள்ளது.
தர்பூசணி ஜூஸ் : கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தான் தர்பூசணி . தர்பூசணி ஜூஸில் 92 சதவீதம் நீர் மற்றும் இயற்கையான இனிப்பு சுவை அதிகம் உள்ளது. இதை நீங்கள் தினமும் ஜூஸாக செய்து சாப்பிடும் போது உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அதேசமயம் தேவையற்ற கலோரிகளை உடலில் சேர்வதையும் தடுக்கிறது.
சுரைக்காய் ஜூஸ் : இதய நோயாளிகளுக்கும், நீரழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும் காய்கறிகளில் ஒன்றாக சுரைக்காய். உடல் எடை இழப்பிற்கும் உதவியாக உள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே உங்களது உணவில் வாரத்திற்கு 3 முறையாவது சுரைக்காயை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது ஜுஸாக செய்து சாப்பிடலாம். ஒருவேளை உங்களுக்கு சுரைக்காயின் சுவை பிடிக்கவில்லை என்றால் இந்த ஜூசுடன் வெள்ளரிக்காய் அல்லது எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவும். நிச்சயம் உங்களுக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும்.
குருதிநெல்லி பழச்சாறு : கிரான்பெர்ரி எனப்படும் குருதி நெல்லி (களக்காய்) ஜூஸில் அதிகளவு புரோந்தோசயனிடின்கள் அதிகளவில் உள்ளது. இவை சிறுநீர் பாதைத் தொற்று பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகறது. மேலும் இவற்றை சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையவும், நல்ல கொழுப்புகள் உற்பத்தியையும் தூண்டுவதற்கு உதவியாக உள்ளது.