நமது இதய துடிப்பு, சுவாசம், செரிமானம் மற்றும் உடல் வெப்பநிலையை சீரான அளவில் பராமரிக்க உதவும் T4 (தைராக்ஸின்) மற்றும் T3 ஹார்மோன்களை வெளியிடுகிறது தைராய்டு சுரப்பி. உடல் சரியாக செயல்பட முக்கிய பங்கு வகிக்கும் சுரப்பியான தைராய்டில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக ஒருவர் ஹைப்பர் தைராய்டிஸம், ஹைப்போ தைராய்டிஸம், தைராய்டிட்டிஸ் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
முடி உதிர்வு / வழுக்கை, மலச்சிக்கல், எடை அதிகரிப்பு /எடை இழப்பு, சீரற்ற மாதவிடாய் சுழற்சி, அதிக சோர்வு, மந்தநிலை போன்ற பல விளைவுகளும் ஏற்படும். ஹைப்பர் தைராய்டிஸம் உடல் எடையை குறைத்து விடுகிறது. ஹைப்போ தைராய்டிஸம் பாதிக்கப்படுபவரின் உடல் எடை அதிகரிக்க செய்து விடுகிறது. போதுமான உடற்பயிற்சிகள், அயோடின் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அடங்கிய சீரான உணவு பழக்கங்கள் ஒருவருக்கு ஆரோக்கியமான தைராய்டு இருப்பதை உறுதி செய்ய உதவுகிறது. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் அதன் அளவை சரியாக நிர்வகிக்க கீழ்காணும் சில உணவுகள் உதவுகின்றன.
குங்குமப்பூ: தைராய்டு பிரச்சனைகள் உள்ளவர்களின் மனநிலை மாற்றங்களை (mood swings) கட்டுப்படுத்த இரவு ஊற வைத்த குங்குமப்பூவை காலை எழுந்தவுடன் சாப்பிடும் பழக்கம் உதவும். தைராய்டு உள்ளவர்களின் உடல் எடை அதிகரிப்பு சிக்கலுக்கு, கேசரி பாத் அல்லது காய்கறி உப்மாவில் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. நல்ல அளவு கால்சியம் மற்றும் புரதத்தை பெற இரவு தூங்க செல்லும் முன் ஒரு கிளாஸ் குங்குமப்பூ பால் குடித்து வரலாம்.
வாழைப்பழம்: தைராய்டு சிக்கல் உள்ளவர்கள் நாளொன்றுக்கு ஒரு வாழைப்பழம் தயக்கமின்றி எடுத்து கொள்ளலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடலில் T4 ஐ T3 ஆக செயல்படுத்துவதற்கும், மாற்றுவதற்கும் அயோடின் அவசியம். வாழைப்பழம் இயற்கையாகவே அயோடின் நிறைந்த மூலமாக இருப்பதால் தைராய்டு பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
கொள்ளு: தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான பயிராக இருக்கும் கொள்ளு, தைராய்டு பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் உதவுகிறது. இதில் புரோட்டின், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை தைராய்டின் சிறந்த செயல்பாட்டிற்கு உதவும் வகையில் TSH-ஐ உற்பத்தி செய்யவும், செயலற்ற T4-ஐ இயற்கையான T3-ஆக மாற்றுகின்றன. எனவே, வாரத்திற்கு 2 - 3 முறை உணவில் கொள்ளு சேர்த்து கொள்வது தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு நன்மை.
கிச்சடி அல்லது பொங்கல்: சமீபத்திய ஆய்வுகளின் படி குடல் ஆரோக்கியம், நம் தைராய்டு ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. குடல் T4 ஆனது T3 ஆக மாற்றப்படும் மற்றொரு இடம். குடல் பாக்டீரியாவில் உண்டாகும் ஏற்றத்தாழ்வு மலச்சிக்கல் அல்லது இரைப்பை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குடலை ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வாரத்திற்கு இரண்டு முறை கிச்சடி/பொங்கல் சாப்பிடுவது நல்லது.