கோடைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் அனைவரும் அதிகமாக பழங்களை சாப்பிட ஆரம்பித்திருப்பீர்கள். அதிலும் சிட்ரஸ் நிறைந்த பழங்களை சாப்பிட்டால் வெயிலுக்கு நல்லது என சாப்பிடுவோம். அதில் முக்கியமான ஒன்று ஆரஞ்சுப் பழம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிட்ரஸ் பழமான ஆரஞ்சில், உடலின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் திறன் உள்ளது. இதோடு கொலாஜனை அதிகரிக்கவும், சரும பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது. 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 53.2 மில்லிகிராம் வைட்டமின் சி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பழத்தின் முழுமையான நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
இதயத்திற்கு நல்லது: இந்த ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி இருப்பதோடு நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதோடு ஆரஞ்சுப் பழத்தில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. இந்தப் பொட்டாசியம் இதயத்தின் சுவர்கள் தடிப்பதை தவிர்க்கிறது. எனவே ஆரஞ்சுப் பழத்தை அடிக்கடி எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது.
தோல் மற்றும் கண் ஆரோக்கியம் மேம்படும்: வெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாயிடு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. மேலும்ஆரஞ்சு கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது பழக்கடைகளில் எளிதில் கிடைக்க கூடியது. வைட்டமின் சி அதிகம் காணப்படும் பழங்களில் ஆரஞ்சு முக்கியமானது. இது கண்புரை உருவாவதற்கான அபாயத்தை குறைக்கிறது. கண்களின் ரத்த நாளங்களுடைய வலிமை மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்க ஆரஞ்சு உதவுகிறது.
உடல் எடையை குறைக்கும்: பூஜ்ஜிய கலோரி கொண்ட பழங்களில் ஒன்றாக உள்ளது ஆரஞ்சு. இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துகள் இருந்தாலும் தேவையற்ற கலோரிகளை எரிக்கும் சக்தி ஆரஞ்சிற்கு உள்ளது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் உங்களது அன்றாட உணவில் ஆரஞ்சை பழமாகவோ அல்லது ஜுஸாகவோ சாப்பிடலாம்.
இரத்த அழுத்தம் சரியாக : ஆரஞ்சுப் பழத்தில் அதிக அளவில் சுண்ணாம்புச் சத்து, நார்சத்து, வைட்டமின்'ஏ', வைட்டமின் 'பி', வைட்டமின் 'சி', பொட்டாசியம், கால்சியம், கந்தகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால் உடல் எடை, மூட்டு வலி, உடம்பில் அதிக உப்புச் சத்து, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் சரியாக இதுவே சிறந்த கனியாக செயல்படுகிறது.