ஆரோக்கியமற்ற உணவு என்பது ஊட்டச்சத்து மதிப்பில்லாத அல்லது மிக குறைவான ஊட்டச்சத்து மதிப்பு மிக்க பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகளாக இருக்கின்றன. இப்படி இருக்கும் உணவுகளில் பல கெமிக்கல்கள், அடிட்டிவ்ஸ் மற்றும் ப்ரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்பட்ட தயாரிப்புகளாக இருக்கின்றன. உணவுளின் சுவை, நிறம், கவர்ச்சி தோற்றம் மற்றும் அவற்றின் ஆயுளை அதிகரிக்க இது போன்ற பல ரசாயன கலவைகள் சேர்க்கப்படுகின்றன. இது போன்ற உணவுகள் நம் ஆரோக்கியத்தில் முற்றிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.உணவுகளில் நீங்கள் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற பொருட்கள் கீழே:
சோடியம் நைட்ரேட் : சோடியம் நைட்ரேட் என்பது பன்றி இறைச்சி, டெலி இறைச்சி மற்றும் ஜெர்கி உள்ளிட்ட பல பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் ஒரு ப்ரிசர்வேட்டிவாக பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்க, இறைச்சிகளின் நிறம் மற்றும் உப்பு சுவையை பாதுகாக்க பதப்படுத்தப்பட்ட இறைச்சி பொருட்களில் சோடியம் நைட்ரேட் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ள சோடியம் நைட்ரேட் வயிற்று புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்துடன் தொடர்புடையது.
ஈஸ்ட் எக்ஸ்ட்ராக்ட் : சீஸ், சோயா சாஸ் மற்றும் பேக்கேஜ்டு உணவுகளில் சால்ட் ஃப்ளேவரை (உப்பு சுவை) கொடுக்க பொதுவாக ஈஸ்ட் எக்ஸ்ட்ராக்ட் பயன்படுத்தப்படுகிறது. உணவில் சேர்க்கப்படும் சிறிய அளவு சோடியம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அனால் அடிக்கடி ஈஸ்ட் எக்ஸ்ட்ராக்ட் சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்து கொள்வது ரத்த அழுத்தத்தில் சிக்கல்களை ஏற்படுத்த கூடும். சில நேரங்களில் சரும அலர்ஜி அல்லது லேசான தலைவலியும் ஏற்படலாம்.
ஒயிட் சுகர் : தூய வெண்மை நிறத்தில் இருக்கும் சுத்திகரிக்கபட்ட சர்க்கரை தினசரி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின்ஸ், மினரல்ஸ், புரோட்டின், கொழுப்புகள் அல்லது ஃபைபர் என எந்த முக்கிய சத்துக்களும் இல்லாததால் வெள்ளை சர்க்கரையில் வெற்று கலோரிகள் (empty calories ) இருப்பதாக கருதப்படுகிறது. இந்த சர்க்கரை பொதுவாக டீ, காபி, பால், ஐஸ்கிரீம், பேஸ்ட்ரிஸ், சோடா மற்றும் பானங்கள் போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடல் பருமன், டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்க கூடும். தவிர டிமென்ஷியா, கல்லீரல் நோய் மற்றும் சில வகை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மைதா : மைதாவை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளில் நமக்கு பிரதானமாக இருப்பது பரோட்டா. மேலும் பல ஃபாஸ்ட் ஃபுட்களில் மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. மைதாவில் பல கெமிக்கல்கள் கலக்கப்படுவதால் இந்த மாவை பயன்படுத்தி தயாரிக்கும் உணவுகளை தவிர்ப்பது பாதுகாப்பானது. அடிக்கடி உணவில் மைதா சேர்த்து கொள்பவர்களுக்கு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய், ஹை கொலஸ்ட்ரால் உள்ளிட்ட அபாயங்கள் அதிகரிக்கிறது. மைதா சாப்பிடுவது கெட்ட கொழுப்பான LDL-ஐ அதிகரிக்கிறது, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, ரத்த சர்க்கரையின் அளவை சீர்குலைக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணெய்கள் : சோயாபீன், கார்ன் மற்றும் காட்டன் சீட் ஆயில் போன்ற மிகவும் பதப்படுத்தப்பட்ட வெஜிடபிள் ஆயில்களில் ஒமேகா-6 பாலிஅன்சாச்சுரேட்டட் ஃபேட்ஸ்கள் நிறைந்திருக்கும். இந்த கொழுப்புகளை மிதமான அளவில் எடுத்து கொண்டால் தான் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் ஆசிட் ரிஃப்லெக்ஸ் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம். அதிக அளவு ஒமேகா-6 உடலில் சேர்வது புற்றுநோய், அல்சைமர், ஆட்டோ இம்யூன் நோய்கள், இதய நோய் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.