கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள பல வழிமுறைகளை நாம் பின்பற்றி வருகிறோம். என்னதான் இளநீர், நுங்கு என இயற்கையான பானங்கள் மற்றும் உணவுகள் கிடைத்தாலும், ஜில்லென்ற தன்மையும், இனிப்புச் சுவையும் கொண்ட ஜூஸ் மற்றும் ஸ்மூத்தி வகைகள் நம் மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
பொதுவாக நமக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு பழத்தை அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பழத்தை எடுத்து, அதனுடன் மேலும் பல பொருள்களை சேர்த்து ஸ்மூத்தி வகைகளை நாம் தயார் செய்கிறோம். இவ்வாறு நாம் ஸ்மூத்தி தயாரிக்கும்போது அதன் சுவையை மென்மேலும் அதிகரிக்கும் நோக்கில் மேலும் பல பொருள்களை சேர்க்கிறோம். அவ்வாறு நாம் சேர்க்கும் பொருள்களில் எவையெல்லாம் உடல் நலனுக்கு தீங்கானது மற்றும் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
செயற்கை மணம் / சுவை சேர்க்கப்பட்ட தயிர்: ஸ்மூத்தியில் புளிக்காத தயிர் சேர்ப்பது மற்றும் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்ப்பது என்பதெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனால், சுவையையும், மணத்தையும் அதிகரிக்கும் நோக்கத்தில் சிலர் நிறம் அல்லது செயற்கை சுவை தயிர் வகைகளை சேர்க்கின்றனர் அல்லது மில்க் ஷேக் சேர்ப்பது வாடிக்கையாக இருக்கிறது. அவற்றில் செயற்கையான சர்க்கரை அதிகம் என்பதால் அதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
கேன்களில் அடைக்கப்பட்ட பழங்கள் : ஸ்மூத்தி தயாரிக்க விரும்பினால் பழங்களை புதிதாக வாங்கிப் பயன்படுத்த வேண்டும். பதப்படுத்தப்பட்ட அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட பழங்களை வாங்கி பயன்படுத்தக் கூடாது. அவை கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். அது உங்கள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.
ரீஃபைண்டு சர்க்கரை: சீனி என்று சொல்லக் கூடிய வெள்ளை நிற சர்க்கரையை ஸ்மூத்திகளில் சேர்க்க வேண்டாம். அது ரத்த சர்க்கரையை கிடுகிடுவென உயரச் செய்யும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அதற்குப் பதிலாக அதிக இனிப்புச் சுவையூட்டுவதற்கு இனிப்பான பழங்களை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.
பாட்டில் ஜூஸ்: ஸ்மூத்திகளில் மாம்பழம் அல்லது வேறு ஏதேனும் பழத்தை சேர்க்க விரும்பினால் அதைத்தான் சேர்க்க வேண்டுமே தவிர, அது கிடைக்கவில்லை என்பதற்காக அந்தப் பழங்களின் படம் போட்ட செயற்கை குளிர்பானங்களை வாங்கி பயன்படுத்தக் கூடாது. அதில் பழச்சாறுகளுக்குப் பதிலாக பெரும்பாலும் சர்க்கரை சத்துதான் கூடுதலாக இருக்கும்.
காய்கறி மற்றும் பழங்கள்: காய்மறி மற்றும் பழங்கள் என இரண்டுமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதுதான். ஆனால், இந்த இரண்டையும் ஒரே சமயத்தில் கலவையாக சேர்த்து சாப்பிட்டால் செரிமானத்தில் பிரச்சினை ஏற்படும். வயிறு உப்புசம் போன்ற தொந்தரவுகள் வரக் கூடும். ஆகவே, பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்திகளில் காய்கறிகளை சேர்க்க வேண்டாம்.