டீ என்னும் சொல் இந்தியர்களின் வாழ்வில் ஒரு மந்திர சொல் ஆகும். காலை, மாலை, இரவு என எந்த நேரம் என்றாலும் நம் மனம் தயங்காமல் டீ அருந்த தயாராக இருக்கும். குறிப்பாக, உடல் சோர்வு ஏற்படும் சமயங்களில் நம் மனதிற்கு சட்டென்று நினைவுக்கு வருவது டீ தான். அதுவும் மாலை வேளையில் டீ சாப்பிடும்போது, அதனுடன் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நம் மனதிற்கு விருப்பமான விஷயம்.
ஆனால், பக்கோடா, பஜ்ஜி, மைதா பிஸ்கட், சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொறிக்கப்பட்ட மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடுவது உடல் நலனுக்கு கேடு தரும் விஷயம் ஆகும். இதுபோன்ற ஸ்நாக்ஸ்கள் உடல் எடை அதிகரிப்பதற்கும் முக்கியமான காரணம் ஆகும். ஆகவே, சுவையான, அதே சமயம் உடலுக்கு நன்மை பயக்கும் வகையிலான ஸ்நாக்ஸ் வகைகள் குறித்து இந்தச் செய்தியில் தெரிந்து கொள்வோம்.
சோளப்பொறி செய்வதற்கு மிக எளிமையானது. ஒரு கப் சோளத்தில் 32 கலோரிகள் மட்டுமே உண்டு. ரெடிமேட் பாப்கார்ன் பாக்கெட்டுகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது என்றாலும், அதில் பட்டர் மற்றும் உப்பு போன்றவை மிக அதிக அளவில் சேர்க்கப்பட்டிருக்கும். ஆகவே, வீட்டிலேயே சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து, சோளத்தை வறுத்து எடுத்தால் மொறு, மொறுவென சுவையான பார்ப்கார்ன் தயார்.
குழிப்பணியாரம் : உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போன்றவை சேர்த்து அரைத்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு போன்றவற்றை தாளித்து அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு குழிப்பணியார சட்டியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கலாம். நிறைந்த புரதம் மற்றும் கால்சியம் உளிட்ட சத்துக்கள் நிறைந்தது. எண்ணெய் அதிகம் இல்லை என்பதால் கவலை வேண்டியதில்லை. சட்னி, சாம்பார் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். கொஞ்சம் இனிப்பு சேர்த்து சுட்டால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.