உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நமது வாழ்க்கை முறையை சரியாக வைத்து கொள்ள வேண்டும். குறிப்பாக நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமானதாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொண்டு அவற்றை சாப்பிட்டு வரலாம். ஆனால், இன்றைய ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்தில் நாம் சத்தான உணவுகளை எடுத்து கொள்ள தவறி விடுகிறோம். இதன் விளைவாக பலவித நோய்கள் இளம் வயதிலேயே நம்மை ஆட்கொண்டு விடுகிறது.
இதை சரி செய்ய தான் சில டயட் முறைகளை பலர் பின்பற்றி வருகின்றனர். டயட் முறைகள் என்று எடுத்து கொண்டால், நிறைய வகைகள் உண்டு. பேலியோ, கீட்டோ, வீகன், இன்டெர்மிடன்ட் பாஸ்டிங் போன்றவற்றை கூறலாம். சமீப காலமாக வீகன் டயட் பற்றிய பல பேச்சுக்களை இணையத்தில் கேட்டிருப்போம். இதன் அடிப்படை மிக எளிது. அதாவது நாம் அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவுகளை சாப்பிட்டு வருவது தான் வீகன் டயட். இந்த பதிவில் எந்த மாதிரியான இந்திய வீகன் உணவுகள் உங்களுக்கு ஆரோக்கியத்தை தரும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
மசாலா சுண்டல் : இந்திய உணவுகளில் சுண்டல் வகைகளுக்கு என்று தனி இடம் உண்டு. நாம் செய்ய கூடிய குழம்பு, தொக்கு, பொரியல் ஆகியவற்றில் இதை பெரிதும் சேர்த்து கொள்வோம். சுண்டலில் அதிக அளவில் நார்சத்து மற்றும் புரதம் உள்ளது. சில மசாலாக்களை சேர்த்து சோலே என்கிற உணவு வகையாக தயாரித்தும் சாப்பிட்டு வரலாம். பூரி, ரொட்டி, பரோட்டா, சப்பாத்தி ஆகியவற்றிற்கு இது சிறந்த சைட் டிஷ்.
இட்லி மற்றும் தோசை : வீகன் வகை உணவு பிரியர்களுக்கு இட்லி மற்றும் தோசை ஒரு சிறந்த தேர்வாகும். பொதுவாக வீகன் உணவு என்றாலே, ஏதோ ஃபேன்சியான உணவு என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அரிசி மற்றும் உளுந்து கொண்டு தயாரிப்பதால், இட்லி மற்றும் தோசை வீகன் உணவுகளில் அதிகம் கவனிக்கப்படாத உணவாக இருக்கிறது. அது மட்டுமின்றி, உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இட்லி மற்றும் தோசையை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.