தமிழ் புலவர் ஔவை பாட்டியின் ஆயுளை நீட்டிக்க, அதியமான் மன்னன் நெல்லிக்கனி வழங்கிய கதையை அறிந்த நமக்கு, நெல்லிக்காயின் அருமை குறித்து நிறையவே தெரிந்திருக்கும். வைட்டமின் சி சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த நெல்லிக்கனி உண்பதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க உதவும் : குளிர்கால சீசனில் அதிகம் உற்பத்தியாகக் கூடிய கனி வகைகளில் ஒன்றாக நெல்லிக்காய் இருக்கிறது. கசப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகளை கொண்ட நெல்லிக்காய்க்கு, நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் இருக்கிறது. ஆகவே, இந்த நெல்லிக்காயை நீங்கள் தினசரி சாப்பிட்டு வரும் பட்சத்தில், உடல் எடையை குறைக்க அது உதவிகரமாக அமையும்.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது : நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை நாம் குளிர் காலத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும்.
இதய நலன் மேம்படும் : நம் உடலில் செல்கள் பாதிப்பு அடைவதை நெல்லிக்காய் கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலில் சேரக் கூடிய கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. அந்த வகையில் இதய நலனை மேம்படுத்த இது உதவியாக உள்ளது. தினசரி தேன் நெல்லி சாப்பிட்டு வர, நமது சருமம் இளமையான தோற்றம் பெறும்.
பருவகால நோய்களை தடுக்கிறது : குளிர் காலத்தில் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உடலுக்கு இல்லாமல் போவதால் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் நம்மை தாக்குகின்றன. ஆனால், நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, இந்த நோய்களில் இருந்து பெரிய அளவுக்கு தற்காப்பு கிடைக்கிறது.