கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன.
சர்க்கரைநோய் தடுக்கும்: நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் அளவுகோல் `கிளைசெமிக் இண்டெக்ஸ்' எனப்படும். இந்த அளவீடு அதிகமாகும்போது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். ஆனால், கொள்ளு ஆன்டி- ஹைப்பர்கிளைசெமிக் (Antihyperglycemic) உணவு வகையை சேர்ந்தது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும். இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலாம். இதனால், பசியின்மை நீங்கும்; உடல் வலுவாகும்.