இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படும் உணவுகளில் அரிசியும் ஒன்று. இது வயிற்றை நிரப்புவது மட்டுமின்றி உடலுக்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது. மாநிலத்திற்கு, மாநிலம் இங்குள்ள மக்கள் பிரியாணி, புலாவ், இட்லி, சாதம் போன்ற பல்வேறு வடிவங்களில் அரிசியை உட்கொள்கின்றனர். இது பெரும்பாலும் தென்னிந்தியாவிலும் நாட்டின் கிழக்குப் பகுதியிலும் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. மேலும் உலகில் அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளர் என்ற பெயர் பெற்ற இந்தியாவில் அதிகம் விளைவிக்கப்படும் அரிசி வகைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்...
பாசுமதி அரிசி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் பிரியாணி, புலாவ் போன்ற உணவு வகைகளை சமைக்க பாசுமதி அரிசியை பயன்படுத்துகின்றனர். வெள்ளை நிறத்தில் நல்ல நீளமான அரிசியான இது, ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம், பஞ்சாப் போன்ற பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இதன் நீடித்த தன்மை, சுவை ஆகியவை அரிசி வகைகளிலேயே மிகவும் உயர்வானதாக இதனை மாற்றியுள்ளது. உலக பாசுமதி அரிசி உற்பத்தியில் 70% இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
பாலக்காடு மட்ட அரிசி : கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் விளைவிக்கப்படும் அரிசி. இதனை மட்ட அரிசி என அழைக்கின்றனர்.இந்த அரிசியை அப்பம், இட்லி, தோசை போன்றவற்றில் பயன்படுத்தலாம். சேர மற்றும் சோழ வம்சங்களின் காலத்தில் இந்த அரிசி முக்கியமான இடம் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. கேரள மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக இந்த அரிசி குறிப்பிடப்படுகிறது.