ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்ய ஒவ்வொருவரும் ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும். அதிலும் கர்ப்பிணி பெண்கள் என்றால் ஊட்டச்சத்துகள் மிக, மிக அவசியமாகும். கர்ப்ப காலம் முழுவதிலும் தாய்மார்கள் வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி ஏற்படுகிறது. இத்தகைய தருணத்தில் சத்தான உணவுகள் குறித்து அவர்கள் கவனம் செலுத்தியாக வேண்டும்.
கர்ப்பிணி பெண்களுக்கு நாளொன்றுக்கு 300 கலோரிகள் வரை கூடுதலாக தேவைப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, குளிர் காலத்தில் பரவக் கூடிய நோய்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள கர்ப்பிணி பெண்களுக்கு கூடுதலான நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. ஆக, இந்த தேவைகளை நிறைவு செய்யக் கூடிய உணவுகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்.
தயிர் : வயிற்றில் வளருகின்ற குழந்தையின் உடல் அமைப்புக்கும், எலும்புகள் வலு பெறுவதற்கும் கால்சியம் சத்து மிக, மிக அவசியமாகும். ஆக, கால்சியம் சத்து அபரிமிதமாக உள்ள புளிக்காத தயிரை கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாமல் தயிரில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாவானது வயிற்றில் ஏற்படும் தொற்றுகளை தடுக்கிறது.
முட்டை : கர்ப்பிணி பெண்களுக்கு மிகுதியான புரதச்சத்து வழங்குகிறது. இது மட்டுமல்லாமல் கோலின், லூடெயின், விட்டமின் பி 12 மற்றும் டி, ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. நம் எலும்புகளை மட்டுமல்லாமல், குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்தவும் பக்கபலமாக அமைகிறது. குழந்தையின் தசை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
நட்ஸ் : வால்நட், பாதாம், முந்திரி மற்றும் பேரீட்சை போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து, சர்க்கரை சத்து, விட்டமின்கள் மற்றும் மினரல்கள் மிகுதியாக உள்ளன. தண்ணீர் சத்துடைய பழங்களுக்கு மாற்றான உணவுப் பொருட்களாக இவை இருக்கின்றன. எனினும், நிறையூட்டப்பட்ட சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட மிட்டாய் வகைகளை தவிர்க்க வேண்டும்.
உருளைக்கிழங்கு : புதிய தாய்மார்களுக்கு விட்டமின் ஏ சத்து மிகுதியாக தேவை. இந்த விட்டமின் ஏ சத்தை உடலில் உற்பத்தி செய்யக் கூடிய பீடா கரோடீன் உருளைக்கிழங்கில் மிகுதியாக உள்ளது. குழந்தைகளின் திசு வளர்ச்சிக்கு விட்டமின் ஏ அவசியம். ஆகவே தினசரி 100 முதல் 150 கிராம் வரையில் கர்ப்பிணி பெண்கள் உருளைக்கிழங்கு சாப்பிடலாம்.
பச்சை காய்கறிகள் : நார்ச்சத்து, விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்றால் பச்சை நிற காய்கறிகளை மிகுதியாக சாப்பிட வேண்டும். பீன்ஸ், சிட்ரஸ் பழங்கள், தானியங்கள் போன்றவற்றை உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.