உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக, உடல் ஆரோக்கியத்திற்காக, உடல் எடையை குறைப்பதற்காக என ஏதோ ஒரு நோக்கத்தில் நீங்கள் கடினமான உடற்பயிற்சிகளை செய்பவராக இருக்கலாம். எப்படியும் பயிற்சி முடித்த கையோடு வயிறு கபகபவென்று பசியெடுக்க தொடங்கி விடும். இந்த சமயத்தில் நாம் இலக்குகளை மறந்துவிட்டு, மனம் போன போக்கில் இஷ்டப்பட்ட உணவுகளை ஒரு பிடி, பிடித்தோம் என்றால் நம்முடைய கடின பயிற்சி மொத்தமும் வீணாகிவிடும்.
எந்த நோக்கத்திற்காக பயிற்சி செய்தோமோ அந்தப் பலன் கிடைக்காமல் போகலாம். அதே சமயம், ஆற்றலை இழந்து நிற்கும் உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவது அவசியம். தசை வலிமை அடையவும், புத்தாற்றல் கிடைக்கவும் இது அவசியமாகும். நாம் எடுத்துக் கொள்ளும் உணவு புரதச்சத்து நிறைந்ததாக, கொழுப்புகளை எரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
மோர் : புரதம் மற்றும் மாவுச்சத்து இணைந்த பானம் இது. பயிற்சி நிறைவு செய்த பிறகு எடுத்துக் கொள்வதற்கு மிக கச்சிதமான பானம் என்றே சொல்லலாம். ஒரு கிளாஸ் அளவு மோர் எடுத்துக் கொண்டால் உங்களுக்கு 8 கிராம் அளவுக்கு புரதம் கிடைக்கும். மோரில் நல்ல பாக்டீரியா நிரம்பியிருக்கும். அது உங்கள் குடல் நலனுக்கு நல்லது.
பன்னீர் : வீட்டிலேயே தயார் செய்யப்படும் பன்னீர் மிகுந்த ஆற்றலை நீண்ட நேரத்திற்கு கொடுக்கும். குறிப்பாக பசி உணர்வை கட்டுப்படுத்தும். 100 கிராம் அளவிலான பன்னீர் எடுத்துக் கொண்டால், அதில் 18 கிராம் அளவுக்கு புரதச்சத்து கிடைக்கும். இது மட்டுமல்லாமல் எலும்புகளுக்கு வலுவூட்டக் கூடிய கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் பன்னீரில் உள்ளன.