தக்காளி விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இதனால் பட்ஜெட்டில் குடும்பம் நடத்தும் இல்லத்தரசிகள் என்ன செய்வது என்றே புரியாமல் குழம்பிப் போய் உள்ளனர். இந்த விலையை கேட்டால் தங்கமே வாங்கிடலாம் போல என்று தான் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறுகிறதே என ஒரு பக்கம் குமுறிக்கொண்டிருக்க இங்கு தக்காளி விலையும் சரிக்கு சமமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இது நிரந்தரமானது இல்லை என்றாலும் இப்போதைய சூழலில் சமாளித்துதான் ஆக வேண்டும். எனவே உங்களுக்கு உதவிடவே இந்த கட்டுரை. ஒரு வாரத்திற்கு தேவையான குழம்பு பட்டியல்.
புளிக்குழம்பு : இந்த குழம்புக்கு தக்காளி மட்டுமல்ல வெங்காயமும் தேவையில்லை. முதலில் எலுமிச்சை அளவு புளியை தண்ணீர் மூழ்கும் அளவு ஊற்றி அதை அடுப்பின் நன்கு கூழாகும் வரை கொதிக்கவிடுங்கள். பின் மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக எண்ணெய் ஊற்றி சீரகம் - 1 tsp, வெந்தயம் - 1/2 tsp , மிளகு - 1 tsp, காய்ந்த மிளகாய் - 4, பூண்டு - 8 , து.பருப்பு - 2 tsp சேர்த்து நன்கு வதக்கி ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி அரைத்த பொடியை மீண்டும் சேர்த்து வதக்கி அதில் 5 பூண்டு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் அரைத்த புளி விழுதை சேர்த்து கலந்துவிட்டு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். 5 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் குழம்பு கெட்டியாகி தயாராகிவிடும்.
முட்டை குழம்பு : கடாயில் எண்ணெய் ஊற்றி உப்பு , மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்த முட்டையை போட்டு பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள். பின் தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அதே கடாயில் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். பின் மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் 1 1/2 கப் தயிர் சேர்த்து நன்கு கிளறிவிடுங்கள். அதொ ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு தட்டுபோட்டு மூடி விடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து பார்த்தால் நன்கு கெட்டியாகி எண்ணெய் பிரிந்துவரும். அப்போது முட்டைகளை சேர்த்து மிதமான தீயில் மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
காஷ்மீரி தம் ஆலூ கிரேவி : உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்துக்கொள்ளுங்கள். பின் வேக வைத்த உருளைக்கிழங்கை கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள். 4 - 5 காயந்த மிளகாயை தண்ணீரில் 15 நிமிடங்கள் நன்கு ஊறவைத்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள் . பின் கடாயில் தனியா, மிளகு, ஏலக்காய், சோம்பு, சீரகம், பட்டை , கிராம்பு, கசகசா ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வதக்கிக்கொண்டு மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது ஒரு கப் தயிரில் அரைத்த மிளகாய் விழுது மற்றும் மசாலா பொடியை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். இப்பொது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். அடுத்ததாக கலந்த தயிர் மசாலாவை ஊற்றி கலந்துவிட்டு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு கொதி வந்ததும் வறுத்த உருளைக்கிழங்கை சேர்த்து மீண்டும் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடலாம்.
சாம்பார் : ஊற வைத்து கரைத்து எடுத்த புளியை ஒரு கடாயில் சேர்த்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை சேர்த்து தட்டுபோட்டு மூடி கொதிக்க வையுங்கள். பின் குக்கரில் வேக வைத்த பருப்பை சேர்த்து கலந்துவிட்டு மீண்டும் கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்ததும் இறுதியாக தாளிக்க எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் , பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்து வதக்கி கொதிக்கும் சாம்பாரி சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவுங்கள்.
வெஜிடபிள் குருமா : மிக்ஸி ஜாரில் புதினா மற்றும் தயிர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் மஞ்சள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கலந்துவிட்டு காய்கறிகளை சேர்த்து பிரட்டுங்கள். பின் அரைத்த புதினா விழுதையும் சேர்த்து கலந்துவிட்டு கொதிக்க வையுங்கள். இதற்கிடையே தேங்காய், உடைத்த கடலை, சோம்பு மற்றும் முந்திரி சேர்த்து மைய அரைத்து அதையும் கடாயில் ஊற்றி கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் குருமா தயார்.
பருப்புரசம் : முதலில் பருப்பு மற்றும் மாங்காய் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். சாம்பாருக்கு குழைய வேக வைப்பதுபோல் விசில் விடுங்கள். பின் கடாயில் நெய் விட்டு , கடுகு, சீரகம் , மஞ்சள் துள், மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.பின் தக்காளி, பெருங்காயம் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக மிளகு , சீரகப் பொடி சேர்க்கவும்.நன்கு வதக்கிய பிறகு கரைத்து வைத்துள்ள பருப்பு , மாங்காய் கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள். வெல்லமும் சேர்த்துவிடுங்கள். இறுதியாக கருவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி தட்டுப்போட்டு மூடுங்கள். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் மாங்காய் ரசம் தயார்.
வத்தக் குழம்பு : மிளகு , துவரம் பருப்பு , வெந்தயம் , சீரகம் ,தனியா, வரமிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைத்துக்கொள்ளுங்கள்.பின் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் சுண்டைக்காய் வத்தல் பூண்டு சேர்த்து வதக்குங்கள்.சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக புளி கரைசலை ஊற்றுங்கள்.பின் அரைத்த பொடியை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். இறுதியாக இரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் வத்தக்குழம்பு தயார்.