நாட்டில் குரங்கு அம்மை மற்றும் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஒருவர் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவைவில் கவனம் செலுத்துவது நோய்களிலிருந்து அவரை தடுக்க உதவும். பருவமழை காலத்து தொற்றுகள் தாக்காமல் தற்காத்து கொள்ள மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள உதவும் டயட்டை பின்பற்ற நீங்கள் விலையுயர்ந்த சப்ளிமெண்ட்ஸ் அல்லது கவர்ச்சியான சூப்பர்ஃபுட்களை அதிகம் செலவழித்து வாங்க தேவை இல்லை. மாறாக நம் அனைவரது வீட்டிலும் பொதுவாக இருக்கும் சில சமையலறை மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் போதும். கீழ்காணும் சமையலறை பொருட்கள் தொற்றுகளை தடுப்பதில் மற்றும நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில் அற்புதங்களை செய்யும்.
மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் எனப்படும் கலவை உள்ளது. இந்த கலவை மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புக்கு பெரிதும் உதவுகிறது. இதனால் தான் சளி, காய்ச்சல் மற்றும் பிற மழைக்கால நோய்களுக்கு முக்கிய மருந்தாக மஞ்சள் மற்றும் மஞ்சள் கலந்த பால் இருக்கிறது. மழை காலத்தில் தினமும் இரவில் மஞ்சள் கலந்த சூடான பால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பல்வேறு மழைக்கால நோய்கள் வராமல் தடுக்கும்.
இஞ்சி : இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோல்ஸ் மற்றும் ஷோகல்ஸ் போன்ற சிறந்த அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் தொண்டை வலியிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. இஞ்சியில் ஜிஞ்சரோல்ஸ், ஷோகோல்ஸ் தவிர பாரடோல்ஸ், செஸ்கிடர்பீன்ஸ் மற்றும் ஜிங்கரோன் ஆகியவை நிரம்பியுள்ளன. இவை அனைத்தும் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளன. வளர்சிதை மாற்றத்திற்கும் இஞ்சி உதவுகிறது. மாலை பருகும் டீயில் சிறிது நசுக்கப்பட்ட இஞ்சியைச் சேர்த்து பருகுவது நலன் பலனளிக்கும்.
மிளகு: கருப்பு மிளகு கார்மினேடிவ் குணங்களை கொண்டுள்ளது. இது அழற்சி எதிர்ப்பு, ஆன்டிஆக்சிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் காய்ச்சலை குறைக்கும் குணங்களைக் கொண்டிருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மிளகு சுவாச குழாயில் உள்ள சளி மற்றும் சளி படிவுகளை தளர்த்தி வெளியேற்றுகிறது. சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிப்பதில் மிளகு பெரிதும் பயன்படுகிறது. மேலும் கருப்பு மிளகில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது ஒரு நல்ல ஆன்டிபயாடிக் ஆகவும் செயல்படுகிறது.
பூண்டு: குறிப்பாக மழைக்காலத்தில் நம் உணவில் சேர்க்க வேண்டிய முக்கிய பொருள் பூண்டு. பூண்டில் உள்ள அல்லிசின் என்ற கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நமது உடலை பல்வேறு தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. சுவாசத்திற்கு இடையூறாக இருக்கும் சளியை அகற்றவும், இருமலை போக்கவும் உதவுகிறது. மேலும் பல பொதுவான மழைக்கால நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
துளசி : புனித மூலிகையான துளசி ஆன்டிஆக்சிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் வயதான ஆன்டி-ஏஜிங் பண்புகளைக் கொண்டுள்ளது. தினமும் சில துளசி இலைகளை மென்று சாப்பிடுவது பல பருவகால நோய்கள் வராமல் தடுக்கிறது. சுவாசக் குழாயில் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. நுரையீரலின் காற்றுப்பாதைகளை விரிவுபடுத்துகின்றன. மழைக்காலத்தில் ஜலதோஷத்தை தடுக்க தினமும் துளசி டீ குடிக்கலாம்.