ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் தெரிந்தே வைத்திருக்கிறோம். ஆனால் சத்துள்ள உணவை எந்தளவிற்கு நாம் சாப்பிட வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த காய்கறிகளை எவ்வுளவு சாப்பிடலாம் என்ற பட்டியல் தயார் செய்துவிட்டால், கடைகளில் அதை எளிதாக வாங்கி நமது உணவை திட்டமிட்டு சாப்பிடலாம். இந்த செயல்முறையில் ஆரோக்கியமான டயட்டின் முக்கியமான அம்சம் ஒன்றை நாம் அடிக்கடி மறந்துவிடுவோம். அதுதான் எதையும் அளவாக சாப்பிடுவது. நாம் உண்ணும் சத்துள்ள காய்கறிகளுக்கும் இது பொருந்தும். காய்கறிகளை சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்றாலும் அதை அதிகளவில் உணவில் எடுத்துக்கொள்ளும் போது நமது உடல்நலத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இப்போது நமக்கு கேள்வி எழலாம்? சரி நீங்கள் தினசரி சாப்பிடும் காய்கறிகளை எப்படி அளவாக சாப்பிடலாம் என்ற பட்டியல் ஒன்றை நாங்கள் தயார் செய்துள்ளோம். வாசிக்க தயாராகுங்கள்……
ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் அதை அதிகளவு சாப்பிடக் கூடாது. ஏன் தெரியுமா? ஆரோக்கியமான உணவு என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வோம். மொத்த கொழுப்பு, நிறைவுக் கொழுப்பு, கொலஸ்ட்ரால், சோடியம் அளவு ஆகியவற்றை கட்டுப்படுத்தி, விட்டமின் A, விட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை நம் உடலுக்கு தினசரி 10% வழங்குவதே சரியான டயட் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drugs Administration) கூறுகிறது. ஆனால் இந்தச் சத்துகளை அதிகளவில் எடுக்கும் போது நம் உடலில் பல பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். பழம், காய்கறிகள் எவ்வுளவுதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும் அதை அதிகளவில் சாப்பிடும் போது நமது உடல் எடை அதிகரிக்கும் என லயோலா பல்கலைக்கழக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. “நம் உடலின் உள்ளே செல்லும் ஆற்றலுக்கும் வெளியே செல்லும் ஆற்றலுக்கும் இருக்கும் வித்தியாசத்தின் அடிப்படையில் தான் உடல் எடையின் ஏற்ற இறக்கம் மாறுபடுகிறது. நீங்கள் தினசரி வெளியேற்றும் ஆற்றலை விட, நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவு அதிகமாக இருந்தால் உங்கள் எடை அதிகரிக்கும். அதே சமயம் குறைவாக இருந்தால், உங்கள் உடல் எடை குறையும்” என இந்த ஆய்வு கூறுகிறது. ஆகவே, உடல் எடை அதிகரிப்பதையோ மற்றும் அது தொடர்பான உடல்நல பிரச்சனைகள் வருவதையோ தவிர்க்க வேண்டுமென்றால் அதிகளவில் பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிடாதீர்கள். நீங்கள் அதிகளவு சாப்பிடக்கூடாத 5 காய்கறிகள் இதோ….
1.உருளைக்கிழங்கு : அதிகளவில் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? உருளைக்கிழங்கு அதிகமான மாவுச்சத்தைக் கொண்டது. ஆகையால் இதில் கார்போஹைடரேட் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக செரிமானத்தில் சிக்கல் ஏற்பட்டு வாய்வுத்தொல்லையும் பதட்டமும் ஏற்படும். உருளைக்கிழங்கு அதிகமான கிளைசெமிக் குறியீடைக் கொண்டிருப்பதால் இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை உடனடியாக அதிகரிக்கும்.
2. பச்சை பட்டானி : சப்பாத்தி/பரோட்டாவிற்கு பட்டாணி குருமா வைத்து சாப்பிடும்போது எவ்வுளவு சுவையாக இருக்கும். அதன் வாசனைக்காகவே கூடுதலாக ஒரு சப்பாத்தி சாப்பிடுவோம். ஆனால் அதிகமாக பட்டானி சாப்பிட்டால் சில பக்க விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதிலிருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், இதை அதிகளவில் உண்ணும் போது நம் உடலில் உள்ள விட்டமின் K அதிகரித்து, கால்சியத்தின் அளவை குறைக்கிறது. இதனால் உடல் அதிகளவில் யுரிக் ஆசிடை வெளியேற்ற காரணமாகிறது.
3. பீட்ருட் : இப்போதெல்லாம் பீட்ரூட்டை மக்கள் அதிகளவில் உணவில் எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு சூப்பர்ஃபுட் என்ற பெயரை மக்களிடத்தில் பீட்ரூட் பெற்றுவிட்டது என்றால் அது மிகையல்ல. நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான சத்துகளும் நன்மைகளும் பீட்ரூட்டில் உள்ளன என்பது முற்றிலும் உண்மை. எனினும் இதை அதிகளவில் சாப்பிடும் போது, குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பீட்ரூட்டில் உள்ள டயட்டரி நைட்ரேட், ரத்த நாளங்களை விரிவடையச் செய்து உடலின் ரத்த அழுத்த அளவை குறைக்கிறது என மருத்துவ இதழ் (Physiology-Heart and Circulatory Physiology) ஒன்றில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.
4. சோளம் : உங்கள் பிரியமானவர்களோடு கடற்கரைக்குச் சென்று, அங்கு நெருப்பில் வாட்டிய சோளத்தில் கொஞ்சம் லெமன் பிளிந்து ருசித்து சாப்பிட்டிருப்பீர்கள் தானே. சோளம் ஆரோக்கியம் சார்ந்த உணவு என்பதால் இதை உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தங்கள் டயட்டில் சேர்க்க நினைப்பார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? சோளம் சாப்பிடுவதால் நம் உடல் எடை கூட வாய்ப்பு இருக்கிறது. சோளத்தில் நார்ச்சத்து அதிகமாக இருந்தாலும், அதிகளவில் சர்க்கரையும் கார்போஹைடரேட்டும் சேர்ந்திருக்கிறது. இதன் காரணமாக நாம் சோளத்தை அதிகளவில் சாப்பிடும்போது நமது உடல் எடை அதிகரிப்பதோடு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகமாகிறது.
5. சிலுவை காய்கறிகள் : ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளில் உங்கள் ஆரோக்கிய டயட்டிற்கான தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியுள்ளன. ஆனால் இக்காய்கறிகளை உணவில் அதிகளவில் எடுத்துக்கொள்ளும் போது வாய்வுத்தொல்லையும் செரிமானப் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏன் என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? ஏனென்றால், இக்காய்கறிகளில் சிக்கலான சர்க்கரை சேர்ந்திருப்பதால், செரிமானம் ஆவதற்கு கொஞ்சம் நேரம் அகும்.