உடலுக்கு குளிர்ச்சியும், ஆரோக்கியத்தையும் தருகின்ற பழங்களை புறக்கணித்துவிட்டு கோடை காலத்தை கடந்து செல்ல முடியாது. அதிலும் கோடைகால சீசனில் விற்பனைக்கு வரக் கூடிய வாட்டர்மெலான் என்னும் தர்பூசணி பழம், மஸ்க்மெலான் என்னும் முலாம்பழம், நன்னாரி சர்பத், நுங்கு போன்றவை இல்லாமல் கோடை காலம் முழுமை அடையாது.
முலாம்பழங்களில் நீர்ச்சத்து அதிகம். வெளிப்புறத்தில் தடிமனான ஓடு போன்ற அமைப்பு இருந்தாலும், அதனுள்ளே ஆரஞ்சு போன்ற கூழ் வடிவ பழம் நமக்கு கிடைக்கும். அதில் ஆண்டிஆக்ஸிடண்ட் சத்துக்கள் அதிகம். சாலையோர தள்ளுவண்டி கடைகளிலும் கூட இந்தப் பழம் நியாயமான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது என்பதால் சாமானியர்களும் இதை வாங்கி சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கிறது.
எப்படி பார்த்து வாங்க வேண்டும் ? ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் என இப்படி ஏதாவது ஒரு பழம் வாங்குவதற்காக நாம் கடைக்குச் செல்லும்போது தரமான பழங்களை தேர்வு செய்ய நினைப்போம். அந்தப் பழங்களின் வெளிப்புறத்தை பார்த்தாலே அவை எந்த அளவுக்கு கனிந்துள்ளது, அழுகத் தொடங்கியுள்ளதா என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால், முழாம்பழத்தின் வெளிப்புறப் பகுதியில் மஞ்சள் நிற ஓடு மட்டுமே இருக்கும். உள்ளுக்குள் எப்படி இருக்கும் என்பதை அவ்வளவு எளிதாக கணித்துவிட முடியாது. இத்தகைய சூழலில் தரமான பழம் வாங்க நினைப்போருக்காக பயனுள்ள டிப்ஸ் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.