வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் நிலவக் கூடிய கோடை காலம் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே தலை காட்ட தொடங்கியிருக்கிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் அதே சமயம், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைகாலத்தில் உடல் ஆரோக்கியத்தை தக்க வைக்க இது உதவும். நாம் எடுத்துக் கொள்ளும் பானங்கள் நம் தாகத்தை தணிப்பதோடு மட்டுமல்ல, உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தி குளிர்ச்சி தருவதாகவும் அமைய வேண்டும்.
கரும்புச்சாறு : கோடைபருவத்தை ஒட்டி சாலையோரங்களில் அமைக்கப்படும் கடைகளில் முதன்மையானது கரும்புச்சாறு விற்பனையகம் ஆகும். கரும்பு, இஞ்சி, எலுமிச்சை எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, புதினா சேர்த்து தருவார்கள். இயற்கையான இனிப்பு சுவை கொண்ட இந்த பானத்தில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. ஐஸ் சேர்க்காமல் பருகுவது நல்லது.
வெந்தய டீ : உடலுக்கு மிகுதியான குளிர்ச்சியை தரக் கூடியது மற்றும் உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றக் கூடியது ஆகும். வாயு, வயிறு உப்புசம் போன்ற தொந்தரவுகளுக்கு தீர்வு அளிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தி அதிகரிக்கும். டீயாகவும் அருந்தலாம் அல்லது ஊற வைத்த தண்ணீரை வெந்தயத்துடன் விழுங்கலாம்.
இளநீர் மற்றும் நுங்கு : இயற்கையாகவே நீர்ச்சத்தை சேமித்து வைத்திருக்கக் கூடியது மற்றும் நம் பாரம்பரிய உணவு வகையைச் சேர்ந்தது ஆகும். காலைப் பொழுதில் இளநீர் அருந்துவது அன்றைய நாள் முழுவதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். நண்பகல் பொழுதில் நுங்கு அல்லது நுங்கு சேர்த்த பதநீர் சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.