உங்களின் அன்புக்குரியவர்களுடன் இந்த விடுமுறையை சிறப்பாக கொண்டாட சில சுவையான ரெசிபிக்களை நீங்கள் முயற்சிக்கலாம். குறிப்பாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவுகளை நீங்கள் விடுமுறை நாட்களில் தயார் செய்து கொடுத்தால் எல்லோரும் மகிழ்வாக சாப்பிடுவார்கள். எனவே, உங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை இன்னும் சுவாரஸ்யமாக்க சில ஆரோக்கியமான ரெசிபிக்களை நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம். இவற்றை எப்படி எளிமையாக வீட்டில் செய்யலாம் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
மது அல்லாத எக்னாக் : இந்த ஆரோக்கியமான ஆல்கஹால் அல்லாத எக்னாக் ரெசிபி மிகவும் எளிதானது. இதை தயார் செய்ய, பாதாம் பால், தேன், முட்டையின் மஞ்சள் கரு, இலவங்கப்பட்டை பொடி மற்றும் ஜாதிக்காய் ஆகியவற்றை ஒரு பிளெண்டரில் சேர்த்து, தோராயமாக ஒரு நிமிடம் அல்லது இந்த கலவை மென்மையாகும் வரை நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு, இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும். இதை 10-15 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும். இப்போது எக்னாக் கெட்டியானதும், வெண்ணிலா எசன்ஸை சேர்த்து கொள்ளவும். பிறகு இதை காற்றுப் புகாத பாத்திரத்திற்கு மாற்றவும். சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து குளிர்விக்கவும். அவ்வளவு தான், சுவையான எக்னாக் ரெசிபி ரெடி. பரிமாறுவதற்கு முன் சிறிது இலவங்கப்பட்டை மற்றும் சிறிது ஜாதிக்காய் பொடியை தூவி பரிமாறலாம்.
குயினோவா பர்பி : இந்த பண்டிகைக் காலத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட குயினோவா பர்பி ஒரு ஆரோக்கியமான ரெசிபியாகும். இதில் அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு சத்து உள்ளது. சிற்றுண்டிகளை விரும்புவோருக்கு இது மிகவும் பிடிக்கும். இந்த ஆரோக்கியமான சிற்றுண்டியை தயாரிக்க, ஓவனை 325 டிகிரிக்கு முன்கூட்டியே சூடாக்கி கொள்ளவும். அடுத்து, பேக்கிங் பேப்பரை விரித்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் குயினோவா, ஓட்ஸ், மூல வேர்க்கடலை, தேங்காய், சர்க்கரை, சியா விதைகள் மற்றும் கடல் உப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். பிறகு தேங்காய் எண்ணெய், மேப்பிள் சிரப் மற்றும் வெண்ணிலா சாறு ஆகியவற்றை இதில் சேர்த்து கொண்டு நன்றாக கலக்கி கிளறி விடவும். இதை ஓவனில் வைத்து வேக வைக்கவும். பிறகு, இந்த கலவையை தேங்காய் எண்ணெய் தடவிய தட்டில் மாற்றி, முழுமையாக ஆறவிடவும். ஆரோக்கியமான வேர்க்கடலையை உங்கள் கைகளால் கடிக்கும் அளவு துண்டுகளாக உடைக்கவும்.
மியூஸ்லி ஸ்வீட் : கிரீக் தயிர், சத்தான பழங்கள், நட்ஸ் மற்றும் மியூஸ்லியுடன் ஒரு நாளைத் தொடங்குவது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த ரெசிபியை தயார் செய்ய, ஒரு கண்ணாடி கப் அல்லது கிண்ணத்தில் 2 டீஸ்பூன் மியூஸ்லியை சேர்த்து கொள்ளவும். அடுத்து, 2 டீஸ்பூன் கிரீக் தயிர் சேர்க்கவும். பின்னர் இதில் பெர்ரி மற்றும் அன்னாசி துண்டுகளை சேர்க்கவும். கோப்பை நிரம்பும் வரை செயல்முறையை மீண்டும் செய்யவும். இறுதியாக, அடுக்குகளின் மேல் 1 டீஸ்பூன் தேனை சேர்த்து கொண்டு பரிமாறலாம்.
சூடான பெர்ரி க்ரம்பிள் : விதைகள் மற்றும் நட்ஸ் சேர்ப்பது இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரும். எனவே, இந்த ஆரோக்கியமான பெர்ரி க்ரம்பிளை செய்ய, ஓவனை 350 டிகிரிக்கு முன்கூட்டியே சூடாக்கி கொள்ளவும். அடுத்து,தேங்காய் எண்ணெய், பேரீச்சம்பழம் மற்றும் ½ வெண்ணிலா சாற்றை ஃபுட் புராசஸரில் சேர்த்து, பேஸ்ட் போல் உருவாகும் வரை கலக்கவும். பின்னர் பாதாம் மாவு, அக்ரூட், தேங்காய் துருவல், அரைத்த ஆளி விதைகள் மற்றும் ½ இலவங்கப்பட்டை பொடி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளவும். பிறகு, உறைந்த பெர்ரி மற்றும் அரோரூட் ஸ்டார்ச் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, இந்த கலவை சமமாக பூசப்படும் அளவுக்கு பரப்பி கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறு, இலவங்கப்பட்டை பொடி மற்றும் வெண்ணிலா சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். லேசாக நெய் தடவிய பேக்கிங் டிஷில், பெர்ரி கலவையைச் சேர்த்து, பின்னர் டாப்பிங்கை மேலே தெளிக்கவும். இந்தபெர்ரி க்ரம்பிள் ஓவனில் 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். பேக்கிங் செய்தவுடன் இதை அடுப்பிலிருந்து இறக்கி, குளிர்ந்த பிறகு சாப்பிடலாம்.
குயினோவா இட்லி : இந்த ஆரோக்கியமான உணவை தயாரிக்க, தண்ணீர் தெளிவாக மாறும் வரை குயினோவா மற்றும் அரிசியை நன்றாக கழுவி கொள்ளவும். பின்னர் குயினோவா மற்றும் அரிசியை போதுமான தண்ணீரில் (சுமார் 2.5 கப்) சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும். இதேபோல், உளுத்தம் பருப்பை கழுவி கொண்டு, சுமார் 2 கப் தண்ணீர் ஊற்றி, 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். 6 மணி நேரம் கழித்து, ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி குயினோவா மற்றும் அரிசியை ஊறவைத்த தண்ணீரை வடிகட்டவும். பின்னர் வடிகட்டிய குயினோவா மற்றும் அரிசியை, 1 கப் குளிர்ந்த நீரை சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். அரைத்த குயினோவா மற்றும் அரிசியை உடனடியாக ஸ்டீல் பாத்திரத்திற்கு மாற்றவும். இதேபோல், உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை மென்மையான பேஸ்டாக அரைத்து எடுத்து கொண்டு, குயினோவா மற்றும் அரிசியுடன் கலந்து கொள்ளவும். இதில் 1 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். இப்போது, சுத்தமான கைகளைப் பயன்படுத்தி, இரண்டு மாவுகளையும் உப்புடன் கலக்கவும். 2 நிமிடங்களுக்கு உங்கள் கைகளைப் பயன்படுத்தி நன்றாக கலந்து கொள்ளவும். இப்படி செய்வதால் மாவு நன்றாக நொதித்து வரும். இட்லி மாவு போன்ற பதத்திற்கு நீங்கள் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கலாம். மாவு புளித்தவுடன், எப்போதும் போல இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றவும். இட்லிகளை ஆவியில் வேகவைத்து, குயினோவா இட்லியை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.