வெர்சடைல் உணவு என்று கூறப்படும் காய்கறிகளில், காலிஃபிளவருக்கு முதலிடத்தையே கொடுக்கலாம். காய்கறிகள் சாப்பிட பிடிக்காது என்று கூறுபவர்கள் கூட காலிஃபிளவரை விரும்பி சாப்பிடுவார்கள். காலிஃபிளவரை விதம் விதமாக, விரும்பும் சுவையில் சமைத்து சாப்பிடலாம். அதுமட்டுமில்லாமல் காலிஃபிளவரை சேர்க்கும் உணவின் சுவை அதிகரித்துவிடும். கோபி 65, கோபி மன்சூரியன் விரும்பாதவர்கள் மிகவும் குறைவு.
காலிஃபிளவரில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது மற்றும் பெரும்பாலான உணவுகளில் இல்லாத வைட்டமின் கே என்ற அரிதான வைட்டமினும் இதில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இது மிக மிக கலோரி குறைந்த ஒரு காய்கறியாகும். எனவே எல்லா எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் காலிஃபிளவரை பலரும் சாப்பிடலாம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று கூறப்படும் அளவுக்கு காலிஃப்ளவர் சாப்பிடுவதிலும் ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. க்ருசிஃபெராஸ் காய்கறிகள் என்ற காய்கறிகளின் வகையை சேர்ந்த காலிஃப்ளவரை அதிகமாக சாப்பிட்டால் இந்த ஐந்து பிரச்னைகள் ஏற்படலாம்.
செரிமான கோளாறு மற்றும் வாயுத்தொல்லை : ஏற்கனவே கூறியுள்ளது போல காலிஃபிளவர் என்பது க்ருசிஃபெராஸ் காய்கறிகள் வகையைச் சேர்ந்தது. இவற்றில் ரஃபினோஸ் என்ற மிக மிக கடினமான ஒரு குளுக்கோஸ் இருக்கிறது. பெரும் குடலால் இந்த குளுக்கோசை அவ்வளவு எளிதாக செரிமானம் செய்ய முடியாது. எனவே வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் இதை ஃபெர்மன்ட் செய்து, பிறகு செரிமானம் ஆகும். எனவே நீங்கள் காலிஃபிளவர் அதிகமாக சாப்பிடும் பொழுது இந்த ஃபெர்மெண்டேஷன் ஆகும் சமயத்தில் வயிறு உப்பசம் மற்றும் வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான கோளாறு ஏற்படும்.
க்ருசிஃபெராஸ் காய்கறிகளை தைராய்டு குறைபாடு இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது : தைராய்டு சுரப்பியால் உடலுக்கு தேவையான அளவுக்கு தைராய்டு ஹார்மோனை சுரக்க முடியவில்லை என்ற நிலை தான் ஹைப்போ தைராய்டு என்று கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இந்த குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். ஹைப்போ தைராய்டு இருந்தால் வளர்சிதை மாற்றம் மிகவும் குறைந்துவிடும். எனவே நாள் முழுவதும் சோர்வாக இருப்பீர்கள். காலிஃபிளவர் முட்டைகோஸ் உள்ளிட்ட ஒருசில உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால் இந்த உணவுகள் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை இன்னும் மந்தமாக்கிவிடும்.
அலர்ஜி ஏற்படுபவர்கள் தவிர்க்க வேண்டும் : அடிக்கடி அலர்ஜி ஏற்படும் நபர்கள் அல்லது நீடித்த அலர்ஜி தொந்தரவு இருப்பவர்கள் காலிஃபிளவரை தவிர்த்து விட வேண்டும். ஒரு சிலருக்கு இதை சாப்பிட்டால் உடனடியாக சருமத்தில் அலர்ஜி, வீக்கம், அல்லது மூச்சு திணறல் ஆகியவை ஏற்படலாம். ஒருமுறை காலிஃபிளவர் சாப்பிட்டு உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டால், நீங்கள் காலிஃபிளவரை முழுவதுமாக தவிர்த்து விடவேண்டும்.
ரத்த அடர்த்தியைக் குறைக்கும் மருந்து சாப்பிடுபவர்கள் : ஏற்கனவே கூறியுள்ளது போல காலிஃப்ளவரில் வைட்டமின் கே என்ற வைட்டமின் இருக்கிறது. பிளட் தின்னிங் அதாவது ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் காலிஃபிளவரை அதிகமாக சாப்பிடக்கூடாது. இந்த மருந்தை உட்கொள்பவர்கள் அதிக அளவு காலிஃபிளவரை சாப்பிட்டால் பிளட் கிளாட் ஏற்பட்டு அது உயிருக்கே ஆபத்தாக விளையும்.
பசி எடுக்காமல் மந்தமாக இருக்கும் : காலிஃப்ளவர் நார்சத்து நிறைந்த உணவு என்பது ஒருபக்கம் உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும், அதிக அளவில் நீங்கள் சாப்பிடும் பொழுது உங்களுக்கு பசி எடுக்காமல் வயிறு மந்தமாக இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். ஏற்கனவே எடை மெலிந்து இருப்பவர்கள் அல்லது எடை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.