ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, கிவி பழம், ப்ரக்கோலி, காலே மற்றும் கீரை போன்ற பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். மேலும் பெண்களுக்கு தினசரி 75 மி.கி வைட்டமின் சி-யும், ஆண்களுக்கு 90 மி.கி அளவும் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு அத்தியாவசிய வைட்டமின்களில் ஒன்றாக உள்ள வைட்டமின் சி-யை நம்முடைய உணவு முறையில் பல வழிகளில் சேர்த்துக் கொள்ளும் போது, பல நோய்களுக்குத் தீர்வாக அமைகிறது என்கிறார் பிரபல பிசியோதெரபிஸ்ட் மற்றும் உடற்பயிற்சியாளர் டாக்டர் பிரசாந்த் மிஸ்திரி. வைட்டமின் சி-யில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்..
நாள்பட்ட நோய்க்கான ஆபத்தைக் குறைத்தல்: வைட்டமின் சி சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஃபோலிக் அமிலத்தை செயல்படுத்துதல் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதோடு, பித்த அமிலங்களாக கொழுப்பை மாற்றுவது உள்ளிட்ட பல வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கும் உதவுகிறது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் : இன்றைக்கு உயர் ரத்த அழுத்தம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய பொதுவான நோய்களில் ஒன்றாகிவிட்டது. இந்த உயர் ரத்த அழுத்தம் பல விதமான நாள்பட்ட இதய நோய்களுக்குக் காரணமாக அமைவதால் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பொதுவாக வைட்டமின் சி ரத்த அழுத்தத்தைக் குறைத்து கட்டுக்குள் வைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வைட்டமின் சி-யை உட்கொள்ள வேண்டும்.
இதய நோய்க்கான ஆபத்தைக் குறைத்தல்: இதய நோய் வருவதற்கதன வாய்ப்புளைக் குறைக்கும் ஆற்றலை வைட்டமின் சி கொண்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. சுமார் 2,93,172 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வைட்டமின் சி சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு இதய நோய் ஆபத்து அதிகமாக உள்ளது என கண்டறிந்துள்ளனர். அதே சமயம் வைட்டமின் சி உட்கொள்ளும் நபர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து 25% குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்: வைட்டமின் சி-யில் லிம்போசைட்டுகள் மற்றும் பாகோசைட்டுகள் எனப்படும் வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டும் ஆற்றல் உள்ளது. எனவே வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய காய்கறிகள் மற்றும் பழங்களை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதோடு பல தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.