நீங்கள் உட்கொள்ளும் உணவானது உங்களுக்கு தினசரி தேவையான ஊட்டச்சத்தை நிரப்புவதற்கு போதுமானதாக இல்லாத போது ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சமயத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்க மல்டி விட்டமின் மாத்திரைகள் பயன்படுகின்றன. ஒரு மல்டிவைட்டமின் என்பது வைட்டமின்கள், உணவுக் கனிமங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக் கூறுகளுடன் கூடியவை ஆகும்.
ஒரு மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட் என்பது மூலிகைகள், ஹார்மோன்கள் அல்லது மருந்துகளை உள்ளடக்காத மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்ட சப்ளிமெண்ட்களின் கலவையாக தயாரிக்கப்படுகிறது. மல்டிவைட்டமின்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மூலம் கிடைக்கூடிய சத்துக்களை உடலுக்கு வழங்குகின்றன.ஒவ்வொரு தினசரி மல்டி வைட்டமினிலும் இருக்க வேண்டிய ஐந்து ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. மெக்னீசியம்: உடலுக்குத் தேவையான ஆற்றல் உற்பத்தி மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பெற மெக்னீசியம் மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தவும், தூக்க முறைகளை மேம்படுத்தவும், நரம்பு மண்டலத்தில் ஒட்டுமொத்த அமைதியான விளைவையும் ஏற்படுத்தவும் உதவுகிறது. உடல் இயற்கையாகவே மெக்னீசியத்தை உற்பத்தி செய்யாது, எனவே உணவு அல்லது மல்டிவைட்டமின்கள் போன்றவை மூலமாகவே உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்தான இதனை பெற முடியும்.
2. கால்சியம்: மல்டிவைட்டமின்களில் கால்சியம் முக்கியமானது, குறிப்பாக பெண்களின் தினசரி மல்டிவைட்டமின்களில் கால்சியம் தவிர்க்க இயலாதது. ஏனென்றால் பெண்களுக்கு வயதாகும் போது எலும்பு தேய்மானம் அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுகிறது. ஒரு நல்ல மல்டிவைட்டமின் கால்சியம் சிட்ரேட்டைக் கொண்டிருக்கும். இந்த குறிப்பிட்ட வகை கால்சியம் பலருக்கு எளிதில் உறிஞ்சப்படுகிறது.
3. வைட்டமின் டி: உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வைட்டமின் டி அத்தியாவசியமானது. இது முடி உதிர்வை குறைக்க உதவுகிறது. நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் டி இயற்கையாகவே சூரிய ஒளி மூலம் கிடைக்கிறது. இருப்பினும், 40 சதவிகித மக்கள் தங்கள் உடலுக்கு போதுமான அளவு வைட்டமின் டி-யை பெற, போதுமான சூரிய ஒளியை பயன்படுத்துவது கிடையாது. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது உடல் வைட்டமின் டி சத்தை உறிஞ்சுவதை தடுக்கிறது, அதனால்தான் வைட்டமின் டி அதிகம் உள்ள மல்டி வைட்டமின்களை எடுத்துக்கொள்வது முக்கியம்.
4. இரும்பு சத்து: ரெட் மீட் எனப்படும் சிவப்பு இறைச்சியில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. ஆனால் அதிலிருந்து உடலுக்குத் தேவையான அனைத்து இரும்புச்சத்துக்களையும் பெறுவது ஆரோக்கியமானது கிடையாது என சில ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. ஏனெனின் அதிகப்படியான சிவப்பு இறைச்சியை உட்கொள்வது இரும்புச்சத்துக்கு சிறப்பாக இருந்தாலும், பிற உடல் நலப்பிரச்சனைகளை உருவாக்கக்கூடியது. உயர்தர மல்டிவைட்டமின் மூலம் உங்கள் தினசரி தேவையான அளவு இரும்புச் சத்தை பெறுவது அவசியம். ஏனெனில் இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களை ஊக்குவிக்கிறது, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது.
5. வைட்டமின் பி-12: ஒரு நல்ல மல்டிவைட்டமின் வைட்டமின் பி-12 மற்றும் பிற பி வைட்டமின்கள் நிறைந்திருக்கும். குறிப்பாக, வைட்டமின் பி-12 ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் உடல் மற்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. போதுமான வைட்டமின் பி-12 உட்கொள்ளவில்லை என்றால் மந்தமான மற்றும் சோர்வான நிலை ஏற்படும். வைட்டமின் பி-12 மீன், இறைச்சி மற்றும் முட்டை போன்ற உணவுகளில் காணப்படுகிறது; இருப்பினும், உங்கள் உணவில் இருந்து மட்டும் போதுமான வைட்டமின் பி-12 பெறுவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம். அனைத்து நல்ல மல்டிவைட்டமின்களிலும் வைட்டமின் பி-12 அல்லது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆரோக்கியமான பகுதியாக இருக்கும்.