குறைவான அல்லது எண்ணெயே சேர்க்காமல் சமைக்கும் போது நமது இந்திய சமையல் ஆரோக்கியமானதாக மாறுகிறது. ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, உடல் பருமனை குறைப்பது, கொழுப்பை கரைப்பது என இந்திய சமையல் பொருட்கள் மூலமாக எண்ணற்ற பலன்களை நாம் அடைய முடியும். அந்த வகையில் கொழுப்பை விரைவாக கரைக்கக் கூடிய உணவுப் பொருட்கள் குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
பாசிப்பயறு : இதில் விட்டமின் ஏ, பி, சி மற்றும் இ ஆகியவை நிறைந்துள்ளன. இது மட்டுமல்லாமல் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவையும் இருக்கின்றன. பச்சை நிறத்தில் உள்ள பாசிப்பயறில் கொழுப்பு மிக, மிக குறைவு. இது மட்டுமல்லாமல் உடலுக்கு அவசியத் தேவையாக இருக்கின்ற புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை இதில் உள்ளன. உடல் எடையை குறைக்க இது உதவிகரமாக இருக்கும்.
மிளகாய் : உணவில் குறைவான அளவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய மிளகாயும் கூட உடல் எடையை குறைக்க உதவுகிறது. மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள் மெடபாலிச நடவடிக்கைகளை ஊக்குவித்து, உடலில் உள்ள கொழுப்புகளை வேகமாக கரைக்கிறது. மிளகாயை உட்கொண்டால் உங்கள் மெடபாலிச விகிதம் 3 மணி நேரத்திற்கு 23 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கறிவேப்பிலை : நம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு. குறிப்பாக கொழுப்புகளுடன் சேர்த்து கழிவுகளையும் வெளியேற்றும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினசரி கறிவேப்பிலை துவையல் செய்து இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். கறிவேப்பிலையின் மகத்துவத்தை தெரிந்து கொண்டதால் இனி சாம்பார், கூட்டு, பொறியல்களில் கிடக்கும் கறிவேப்பிலையை தேடிப் பிடித்து தூக்கி எறியாமல் சாப்பிட்டு விடுவீர்கள் என்று நம்பலாம்.