சமீப காலமாக உடல் எடையை குறைப்பதற்காக ஒரு புதுவித உணவு முறையை பலர் கடைபிடித்து வருகின்றனர். ஆங்கிலத்தில் இதை 'இன்டெர்மிடென்ட் ஃபாஸ்டிங்' என்று கூறுவார்கள். இந்த இடைக்கால உண்ணாவிரத முறையை கடைபிடித்து பலர் சீரான முறையில் உடல் எடையை குறைத்துள்ளனர். 24 மணி நேரத்தில் 16 மணி நேரம் இந்த உணவு முறையின் படி உண்ணாவிரதம் இருக்க வேண்டும். மீதமுள்ள நேரத்தில் நாம் உணவை சாப்பிட்டு கொள்ளலாம்.
இந்த முறையை எளிதாக பின்பற்ற சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு மிக முக்கியமானதாகும். காலை நேரத்தில் சூரியம் உதயமானதும் காலை உணவை சாப்பிட்டு கொள்ளலாம். அதே போன்று இரவு உணவை சூரியன் மறைவதற்கு முன்னர் சாப்பிட்டு முடித்து விட வேண்டும். அதன்பிறகு வேறு எதையும் சாப்பிட கூடாது. இந்த உண்ணாவிரத முறையை மேலும் சிறப்பாக செய்திட சில வழிமுறைகள் உண்டு. அவற்றை பற்றி தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
உடற்பயிற்சி : உடல் எடையை குறைப்பதற்கு இடைக்கால உண்ணாவிரத முறை மட்டும் போதாது. இவற்றுடன் சேர்த்து உடற்பயிற்சியும் அவசியமாகும். உண்ணாவிரதத்தோடு சேர்த்து உடற்பயிற்சியும் செய்து வந்தால் சிறந்த பலனை பெற முடியும். இப்படி செய்வதால் அதிக கலோரிகள் குறைத்து, விரைவில் சரியான உடல் எடையை அடைந்து விடுவீர்கள்.
பழக்க வழக்கங்கள் : பொதுவாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். இதனை முன்கூட்டியே வரையறுத்து கொள்வது நல்லது. எனவே இதற்கு என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்ய கூடாது என்பதை முன்னதாகவே திட்டமிட்டு கொள்ளுங்கள். இந்த நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும், இந்த நேரத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று உங்களுக்குள் பல முறை கூறி பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
குறிப்பு எடுப்பது : நீங்கள் இன்டெர்மிடென்ட் ஃபாஸ்டிங் முறையை தொடங்கியதில் இருந்தே உங்களின் எடை பற்றி குறித்து வைத்து கொள்ளவும். அதே போன்று நீங்கள் அதை தினமும் சரியாக செய்து வருகிறீர்களா என்பதை நாட்காட்டியில் குறிப்பெடுத்து கொள்ளவும். இது உங்களை உற்சாகப்படுத்தவும், நீங்கள் சரியாக செய்து வருகிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்தவும் வழி செய்யும்.