முட்டைகளில் காணப்படும் இந்த கலவை ஊட்டச்சத்துக்கள் நம் உடலை வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைக்க உதவுகின்றன. தசை வலிமையை அதிகரிக்க உதவுகின்றன மற்றும் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் முட்டையை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். எனினும் முட்டையை ஒரே மாதிரி சாப்பிட்டு வருவது ஒருகட்டத்தில் சலிப்பாக உணர வைக்கும். முட்டை சாப்பிடும் அனுபவத்தை சுவாரசியமாக மற்றும் ருசியாக ஆக்கும் முட்டை சாலட்ஸ் ரெசிபிக்களை தற்போது பார்க்கலாம்.
ஸ்ப்ரொவுட்ஸ் அன்ட் பீனட் எக் சாலட் (Sprouts and peanut Egg salad): இந்த ஈஸியான மற்றும் சுவையான சாலட்டை செய்ய முதலில் தேவையான அளவு முளைகட்டிய பயறு குக்கரில் எடுத்து கொண்டு 2 விசில் வரும் வரை காத்திருக்கவும். இதற்கிடையில் நீங்கள் உங்களுக்கு தேவையான எண்ணிக்கை முட்டையை வேக வைக்கவும். பின் ஒரு கடாயை எடுத்து கொண்டு அதில் சிறிதளவு வேர்க்கடலையை வறுக்கவும். பின் குக்கரில் வேக வைக்கப்பட்ட முளைகட்டிய பயறு , வறுக்கப்பட்ட வேர்க்கடலை, வெங்காயம் மற்றும் வினிகிரெட், கல் உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை சுவைக்கு ஏற்ப சேர்க்கவும். இதன் மேல் வேக வைத்த முட்டைகளை வைத்து சாலட்டை சுவைக்கவும்.
லீஃபி எக் சாலட் (leafy egg salad): ராக்கெட் இலைகள் எனப்படும் கார முட்டை கோஸ் கீரை, சிறிதளவு பசலை கீரை, நறுக்கிய லெட்டூஸ் கீரை இவற்றை தேவையான அளவு எடுத்து நன்கு அலசி கொள்ளவும். வேக வைத்த முட்டையை பாதியாக கட் செய்து கொண்டு அதை சாலட்டின் மேல் வைக்கவும். பின் அதன் மேல் செர்ரி தக்காளியை வைக்கவும். இந்த கலவையோடு சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொள்ளலாம். இந்த சாலட்டை மிகவும் சுவையாக மாற்ற, நீங்கள் சிறிது சீஸ் துருவலை சேர்க்கலாம்.
ஸ்பின்ச் எக் அன்ட் பொட்டேட்டோ ரெசிபி (Spinach egg and potato recipe): இந்த சாலட்டை ரெடி செய்ய ஒரு கடாயில் 2 கப் இளம் பசலை கீரையை எடுத்து கொண்டு, அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 2-3 நறுக்கிய பூண்டு, சுவைக்கேற்ப இஞ்சி, 3 சிறிய உருளைகிழங்குகளை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு கிளறவும். பின் வேக வைக்கப்பட்ட முட்டைகளை இதே கடாயில் போட்டு லேசாக கிளறவும். அடுப்பிலிருத்து இறக்கி மேலும் கொஞ்சம் ஆலிவ் ஆயில் சேர்க்கவும். தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து சாலட்டை சுவைக்கவும்.
எக் அன்ட் கர்ட் சாலட் (Egg and curd salad): 2 - 3 முட்டைகளை நன்கு வேக வைத்து பின் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின் ஒரு பவுலில், 1 ½ கப் தயிர், உப்பு, மிளகு மற்றும் சிவப்பு மிளகாய்களை சுவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும். இதை நன்றாக கலந்து இந்த கலவையில் அரை கப் வோக்கோசு (Parsley), கைப்பிடியளவு வெந்தய இலைகள் மற்றும் நறுக்கிய முட்டைகளை சேர்க்கவும். பின் இந்த கலவையை லேசாக சூடாக்கி பின் சாப்பிடலாம்.
எக் பொட்டேட்டோ சாலட் (Egg Potato salad): 3 உருளைக்கிழங்கை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் அவற்றை 3 முறை குளிர்ந்த நீரில் வாஷ் செய்யவும். இப்படி செய்வதால் கிழங்கில் இருக்கும் ஸ்டார்ச் அகற்றப்படும். பின்னர் ஒரு பாத்திரத்தில், 2 டீஸ்பூன் வீகன் மயோனைஸ், கொத்தமல்லி, சிறிதளவு மசாலா, கடுகு, சிறிது உப்பு, மிளகு தூள், 1 கப் சிவப்பு வெங்காயம் சேர்க்கவும். இதோடு வேக வைத்த உருளை கிழங்கு மற்றும் முட்டைகளை நறுக்கி கலந்து சாலட்டை சுவைக்கவும்.