இந்தியர்களைப் பொருத்தவரை பால் இல்லாத வாழ்க்கை முறை என்பது சற்று கடினம்தான். ‘பால் குடிப்பது நம்மை வலிமையாக்கும்’ என்று பெரியவர்களிடம் கேட்டு நாம் அனைவரும் வளர்ந்திருக்கிறோம், ஆனால் அது உண்மையா? இன்றைய சூழலில் பலர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்று கூறி பால் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை விலக்கி வைத்துள்ளனர். உண்மையில் இது ஆரோக்கியமான போக்குதானா..? அதனால் நன்மைகள் உண்டா..? பாலை நம் அன்றாட வழக்கத்திலிருந்து தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள், லாக்டோஸ் இல்லாத உணவுகளிலிருந்து அதன் வேறுபாடு என்ன என பலவற்றை அலசுகிறது இந்த கட்டுரை.
உடல் பருமன் கட்டுப்படும் : பாலாடைக்கட்டி, சுவையூட்டப்பட்ட தயிர் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பெரும்பாலான பால் பொருட்களில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சர்க்கரை இருப்பதால், பால் இல்லாத உணவை ஏற்றுக்கொள்வது எடை இழப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். அதிக அளவு சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்பு ஆகியவை உடல் பருமன் மற்றும் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கும். பால் இல்லாத உணவை நீங்கள் எடுக்க ஆரம்பித்தால், ஒரு வாரத்தில் உங்கள் உடலில் உள்ள வித்தியாசத்தைக் காணலாம்.
ஆரோக்கியமான வயிறு : பால் , மலச்சிக்கல், வாயு, வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கம் போன்ற பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளை உருவாக்குவதால் பெரும்பாலும் இதை தவிர்க்க விரும்புகின்றனர். ஒரு நபர் பால் இல்லாத உணவைப் பின்பற்றினால் அல்லது பால் சாப்பிடுவதை நிறுத்தினால் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
முகப்பரு நீங்கும் : பால் பொருட்களை உட்கொள்வது முகப்பரு பாதிப்புக்கு வழிவகுக்கும் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது கால்நடை பாலில் உள்ள வளர்ச்சி ஹார்மோன்கள் காரணமாக இருக்கலாம். ஆனால், ஒரு நபர் பால் மற்றும் அது தொடர்புடைய பொருட்களை உட்கொள்வதை நிறுத்தினால், தோல், முகப்பரு அல்லது பருக்கள் இல்லாமல் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் தோற்றமளிக்கும்.
பிஹெச் அளவு சமன்படும் : பால் என்பது ஒரு அமிலத்தை உருவாக்கும் பொருளாகும். இது நமது குடலின் pH சமநிலையின்மையை உண்டாக்கி அமிலத்தன்மையை அதிகரிக்கிறது. அது உணவுக்குழாய் வரை சென்று அமில வீக்கத்தை உண்டாக்கும். மேலும், பால் தயாரிப்புகளை நீண்ட காலத்திற்கு உட்கொள்ளும்போது, அது காஸ்ட்ரோ-உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்க்கு (GERD) வழிவகுக்கும், இது உடலுக்கு ஆபத்தானது. ஒரு நபர் பால் பொருட்களை உட்கொள்வதை நிறுத்தும்போது, உடலின் pH அளவு சமநிலையில் இருக்கும். மேலும் ஆபத்தான நோய்களின் அபாயத்தை தடுக்கலாம்.
உங்கள் உணவில் இருந்து பால் பொருட்களை முற்றிலுமாக நீக்குவது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் தைராய்டு செயலிழப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். எனவே, ஒரு உணவைத் தேர்ந்தெடுக்கும்போதும் அல்லது தவிர்க்கும் போதும், ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உணவியல் நிபுணரிடம் பேசுங்கள்.அதுதான் சிறந்த வழி.