உணவே மருந்து என்பதை தாரக மந்திரமாக கொண்டுள்ள தமிழர் பாரம்பரியத்தில் சமையலறையை குட்டி மருந்தகம் என்றே குறிப்பிடலாம். சமையல் அறையில் உள்ள மசாலா பொருட்கள், வாசனை பொருட்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு துணை நிற்கும். இது மட்டுமல்லாமல் பல விதமான உணவுப் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் போன்றவற்றின் சேமிப்பிடமாகவும் சமையலறை உள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் தளத்தில், ஜூஹி கபூர் என்ற ஊட்டச்சத்து நிபுணர் அண்மையில் வெளியிட்ட பதிவில், ”உங்கள் சமையல் அறையில் இருந்து இந்தப் பொருட்களை உடனடியாக தூக்கி வீசுங்கள். இந்த பொருட்களில் உள்ள ரசாயன நச்சுக்கள் நீங்கள் சமைக்கும் உணவில் கலந்து, அதையும் நச்சாக மாற்றி விடும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் : பார்ப்பதற்கு அழகான வண்ணங்களில் உள்ள பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்கள் இன்றைக்கு எல்லோருடைய சமையலறையிலும் நிறைந்துள்ளன. இந்த டப்பாக்களில் நீங்கள் வைக்கும் உணவு சூடாக இருந்தாலும் சரி அல்லது குளிர்ச்சியாக இருந்தாலும் சரி, அதிலிருந்து சில வாயுக்கள் உற்பத்தி ஆகும். அவை ரசாயன நச்சுக்களை கொண்டிருக்கும். ஆகவே, அழகை பார்க்காமல் ஸ்டீல் டிபன் பாக்ஸ்களை உபயோகிக்கவும்.
அலுமினியம் ஃபாயில் : இன்றைக்கு நீங்கள் எந்த ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தாலும் இந்த அலுமினியல் ஃபாயில் இல்லாமல் உங்களுக்கான உணவுப் பொருட்கள் வந்து சேராது. இதில் சோகம் என்னவென்றால் ஹோட்டல்களை தாண்டி இன்று வீட்டின் சமையல் அறைகளிலும் அவை இடம்பிடிக்க தொடங்கிவிட்டன. அதிக சூடான உணவை வைக்க இதை பயன்படுத்தினாலும், அதில் உள்ள உலோகங்கள் நம் உணவில் கலக்கும் என்பதை நாம் உணருவதில்லை.
பிளாஸ்டிக் கவர் : பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்யப்படும் உணவுகள் அல்லது அதைக் கொண்டு சேமிக்கப்படும் உணவுகள் நம் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியவை ஆகும். அவை நம் உடலுக்குள் புகுந்து ஹார்மோன்களை மாற்றம் செய்துவிடும். இந்த பிளாஸ்டிக் கவர்களுக்குப் பதிலாக காட்டன் துணி அல்லது பேப்பர் ஃபாயில் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
டெஃபிளான் பூசிய பாத்திரங்கள் : சமையல் பாத்திரங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும், சுத்தம் செய்ய எளிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் இந்த வகை பாத்திரங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை சமையலுக்கு உகந்தது அல்ல. ஸ்டீல் பாத்திரங்கள் அல்லது பாரம்பரிய முறையிலான மண் பாண்டங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதே சிறந்தது.