எந்தவொரு உணவுப் பொருள் என்றாலும் அதன் வாசம், சுவை, தோற்றம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அதன் மீதான ஈர்ப்பு நமக்கு ஏற்படுகிறது. ஆனால், நம்மை கவர்ந்திழுக்கும் வாசனையோ, மெய்மறக்கச் செய்யும் சுவையோ வால்நட்களில் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அதன் நிறமும், தோற்றமும் நம் மனதில் எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தாது.
நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்ற, வாழ்வியலை மாற்றி அமைக்கின்ற வகையில் வால்நட்ஸ்களில் சத்துக்கள் உள்ளன. தினசரி நாம் வால்நட்ஸ்களை எடுத்துக் கொள்ளலாம். வால்நட்ஸ் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து இதய நலனை மேம்படுத்தும். அதன் மூலமாக என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
புற்றுநோய் அபாயங்களை குறைக்கும் : வால்நட்ஸ் சாப்பிடுவதால் சில வகை புற்றுநோய்களுக்கான அபாயம் தடுக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய், ஆண்களுக்கான விதைப்பை புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் போன்றவற்றை இது தடுக்கிறது. வால்நட்களில் யூரோலிதின்ஸ் என்னும் பொருள் இருக்கிறது. இது உடலில் ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்படுவதை தடுக்கிறது.
ஆண்களின் இனப்பெருக்கத் திறன் மேம்படும் : பொதுவாக நாம் ஆசையுடன் உட்கொள்ளும் துரித உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவை ஆண்களின் விந்தணு தரத்தை கெடுப்பதாக அமையும். அதே சமயம் வால்நட்ஸ் சாப்பிட்டால் ஆண்களின் விந்தணு தரம் மேம்படும் மற்றும் இனப்பெருக்க திறன் அதிகரிக்கும். கருத்தரிப்பு பிரச்சினையை எதிர்கொண்டு வரும் ஆண்கள் தினசரி 4, 5 வால்நட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.