நமக்கு வயது அதிகரித்து கொண்டே போகிறபோது, தற்போதைய பழக்க, வழக்கங்களை ஆரோக்கியம் சார்ந்ததாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெரும்பாலான மக்கள் காலையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவோடு அன்றைய பொழுதை தொடங்குகின்றனர். ஆனால், மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது ஊட்டச்சத்துகளின் தேவையை மறந்து விடுகின்றனர்.
நமது உணவில் மிக முக்கியமான மாற்றங்களை செய்யக் கூடியது சமையல் எண்ணெய் ஆகும். ஆனால், நமக்கு அருகாமையில் உள்ள மளிகை கடையில் எண்ணற்ற வகையான சமையல் எண்ணெய் இருப்பதால், நாம் எதை தேர்வு செய்ய வேண்டும், எது ஆரோக்கியமானது, எது உணவுக்கு சுவையூட்டுவது என்பதை முடிவு செய்வதில் குழப்பம் அடைகிறோம். இதனால், உங்கள் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் 4 வகையான சமையல் எண்ணெய் குறித்து இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
கனோலா எண்ணெய் : இது கடுகு குடும்ப வகையைச் சேர்ந்த விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும். நம் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் நிறைவூட்டப்பட்ட கொழுப்பு குறைவாக இருக்கிறது. மற்றும் பிற எண்ணெயைக் காட்டிலும் கொலஸ்ட்ரால் அளவு குறைவானதாகௌம். இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மிக அதிகமாக உள்ளது. அது நம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவே, உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் கனோலா எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
கடுகு எண்ணெய் : கடுகு தாவரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இந்த எண்ணெயில் ஏராளமான பலன்கள் உள்ளன. நமது முடி வளர்ச்சிக்கும், சரும பாதுகாப்பிற்கும் மிகச் சிறந்த எண்ணெயாக இது அறியப்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. உடலுக்கு நன்மை பயக்கு மோனோசேட்சுரேட்டட் ஆசிட் உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவியாக அமைகிறது.
கடலை எண்ணெய் : இந்திய குடும்பங்களில், குறிப்பாக தமிழக மக்களின் வீடுகளில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இது. கடலை எண்ணெய் இல்லாத வீடுகளையே நாம் பார்க்க முடியாது. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் மோனோசேச்சுரேட்டட் மற்றும் விட்டமின் இ போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. எந்த வகையான இதய நோய் பாதிப்புகளையும் இது கட்டுப்படுத்தும்.
ஆலீவ் எண்ணெய் : இந்த எண்ணெயை உணவில் எந்த வகையிலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது உணவுப் பொருளை வறுக்க, சமைக்க அல்லது உணவின் மீது எண்ணெய் விட்டு சாப்பிட என அனைத்து வகையிலும் பயனடுத்திக் கொள்ளலாம். இதய நலன் அல்லது புற்றுநோய் தொடர்புடைய பாதிப்புகளை சரி செய்யக் கூடியது. மலச்சிக்கலுக்கு இது தீர்வு தரும்.