ஓய்வு என்பது உங்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கவும், தெளிவாக சிந்திக்கவும், சிறந்த மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ஒரு சிலருக்கு ஓய்வு என்பது பிடிக்காது. ஆனால் அவர்கள் காலப்போக்கில் தங்களது வேலை மற்றும் அன்றாட செயல்பாடுகளில் ஆர்வத்தை இழக்க நேரிடும். ஓய்வு தேவை என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிப்பவர்கள் எதிர்காலத்தில் அதற்கான விலையை நிச்சயமாகக் கொடுக்கிறார்கள். இப்போது நமக்கு தேவையான 7 வகையான ஓய்வு பற்றி இங்கே பார்க்கலாம்..
உடலுக்குத் தேவைப்படும் ஓய்வு (physical rest): மிகவும் சோர்வாக உணரும் நேரத்தில் ஒரு குட்டி தூக்கம் உங்களை உற்சாகப்படுத்த, சோர்வை குறைக்க மற்றும் விழிப்புடன் இருக்க உதவும். ஓய்வெடுப்பது முக்கியம் என்பதால் மன அழுத்தத்துடன் ஓய்வெடுக்காதீர்கள். மன அழுத்தத்தைப் போக்க படுக்க செல்லும் முன் உடலைத் தளர்த்த உதவும் பயிற்சிகளை (relaxation exercises) மேற்கொள்ளலாம்.
மனதுக்கு ஓய்வு (Mental rest): நமது அன்றாட வாழ்வில் நடக்கும் விஷயங்கள் நாம் கற்பனை செய்வதை விட பல வழிகளில் நமது மன ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த நேரங்களில் தியானம் நம்மை உள்மனதோடு இணைத்து, பணிகளை மிகவும் திறமையான முறையில் செய்ய உதவும். ஒருவர் மிகவும் சோர்வாக உணரும் போது சில இனிமையான இசையை கேட்பது மன அமைதியை அளிக்கும்.
உணர்ச்சிபூர்வமான ஓய்வு (Emotional rest): ஆம், நாம் அனைவரும் நம் எமோஷனல் பேட்டரிகளை அவ்வப்போது சார்ஜ் செய்ய வேண்டும். நீங்கள் எந்த நிலையிலும் உணர்ச்சி ஆரோக்கியத்தை புறக்கணிக்கக்கூடாது. உளவியல் ரீதியாக சோர்வாக உணரும் போது உங்களது நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவது சிறந்தது. நிலைமை கைமீறினால் ஒரு நிபுணரைத் தொடர்பு கொள்வதில் தயக்கம் காட்டாதீர்கள்.
சமூக ரீதியான ஓய்வு (social rest): நீங்கள் தினசரி அடிப்படையில் நிறைய நபர்களுடன் பார்த்து பேசி பழக வேண்டியிருந்தால், ஓய்வெடுக்கவும் ரீசார்ஜ் செய்யவும் உங்களுக்கு போதுமான அளவு 'தனிப்பட்ட நேரம்' நிச்சயம் தேவை. எனவே தனியாக வாக்கிங் செல்வது, புத்தகம் படிப்பது அல்லது தனியாக ஒரு டீ பிரேக் எடுப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபடுங்கள்.
சென்சரி ரெஸ்ட்: Sensory rest என்பது புலன்களுக்கு ஓய்வு கொடுப்பதாகும். நம் மனதை அமைதிப்படுத்த முடியாமல் டிவைஸ்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். நீங்கள் இந்த வழக்கத்திலிருந்து சிறிது ஓய்வு எடுக்க நினைத்தால் டிவி உட்பட ஒரு நாள் உங்களது எல்லா டிவைஸ்களையும் ஆஃப் செய்து விட்டு முழு அமைதியை அனுபவியுங்கள்.