பெண்களை அழகாக காட்டுவதில் அவர்களது ஆடைகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இந்தியப் பெண்கள் பலரும் குர்தா அணிவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அலுவலகம் அல்லது கல்லூரி அல்லது பார்ட்டி என எங்கு சென்றாலும் அதற்கு உகந்த உடையாக குர்தா இருக்கிறது. அதிலும், தங்கள் உயரம், உடல் எடை போன்றவற்றுக்கு தகுந்தாற்போல பெண்கள் குர்தாவை தேர்வு செய்யும்போது, அவர்களது அழகு கூடுகிறது. உங்கள் உடல் வாகுக்கு நீங்கள் என்ன மாதிரியான குர்தா தேர்வு செய்யலாம் என்பதற்கான ஆலோசனைகள் இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ளன.
உயரம் மற்றும் மெலிந்த உடல் கொண்டவர்களுக்கு : நீங்கள் மெலிந்த உடலுடன், உயரம் அதிகமுள்ள பெண் என்றால் நீங்கள் குட்டையான அல்லது நீளமான குர்தாக்களை அணியலாம். அதிலும் ஜார்ஜெட், பருத்தி மற்றும் ரேயான் வகை குர்தாக்கள் உங்களுக்கு பொருத்தமாக அமையும். குவார்ட்டர் ஸ்லீவ்லெஸ் குர்தா உங்களுக்கு பொருத்தமாக அமையும். இதேபோல, உயரமும், ஒல்லியுமாக காட்சியளிக்கிற பெண்களும் ஸ்லீவ்லெஸ் குர்தாவை தேர்வு செய்யலாம். அதனுடன் லெகின்ஸ், ஜீன்ஸ் போன்றவற்றை இணைக்கும்போது பொருத்தமான தேர்வாக அமையும்.
பியர் வடிவ பெண்களுக்கு : மார்பளவு மெலிதாகவும், பின்னழகு பெரியதாகவும் கொண்ட பெண்களுக்கு குர்தா அணியும்போது அவர்களது இடுப்பு வளைவுகளை காட்டுவதாக அது அமைய வேண்டும். ஆகவே, இந்த உடல் அமைப்பு கொண்ட பெண்கள் பருத்தியில் செய்யப்பட்ட குர்தாக்களை தேர்வு செய்ய வேண்டும். அதே சமயம், குட்டையான குர்தா உங்களுக்கு பொருத்தமாக இருக்காது. ஆகவே குர்தா நீளமாக இருப்பது அவசியம். குறைந்தபட்சம் முழங்கால்களுக்கு மேலாக குர்தா இருக்க வேண்டும்.
ஹவர்கிளாஸ் உடல்மைப்பு கொண்டவர்களுக்கு : கழுத்தில் இருந்து இடுப்பு வரை ஒரே நேராக, சீரான வடிவமைப்பு கொண்ட பெண்களுக்கு நேர் நீளத்தைக் கொண்ட குர்தா சரியானதாக இருக்கும். உங்கள் மார்பளவு, இடுப்பு மற்றும் பின்னழகு அனைத்தும் சிறிய அளவில் இருக்கும் என்றாலும் உங்கள் குர்தாவின் நெக்லைன் தேர்வில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வி நெக், ஆஃப் ஷோல்டர் நெக், ஸ்கூப் நெக் ஆகியவை கச்சிதமாக இருக்கும்.
குட்டையான மற்றும் மெலிந்த உடல் : சில பெண்கள் குறைந்த உயரம் கொண்டவர்கள் என்றாலும், பார்ப்பதற்கு உயரமானவர்களைப் போல காட்சியளிக்க வேண்டும் என விரும்புகின்றனர். அத்தகைய பெண்கள் வி நெக் அல்லது ஸ்கூப் நெக் ஆகிய டிசைனுடன் கூடிய நேரான, நீளமான குர்தா வகையை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் உயரத்தை கூடுதலாக இருப்பதைப் போன்ற மாயத்தை உருவாக்க உங்கள் முழங்கால்களை விட நீளமான குர்தாவை அணிய வேண்டும். குட்டையான குர்தா அணிவது, உங்கள் உயரத்தை காண்பித்து விடும்.