

கடந்த புதன் கிழமை அமெரிக்க அதிபராக ஜோ பைடனும் , முதல் பெண் துணை அதிபராக கமாலா ஹாரிஸும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியின் துவக்கப்பாடலை பாப் இசைக் குயின் லேடி காகா பாடினார். அமெரிக்காவின் தேசிய கீதத்தை பாடி நிகழ்ச்சியை துவங்கி வைத்த அந்த சில நிமிடப் பொழுதில் அவர் அணிந்திருந்த உடை பலரது கவனத்தையும் ஈர்த்தது.


அவரது ஆடையில் தங்கத்தால் பதிக்கப்பட்ட புறா வாயில் பூ வைத்துக்கொண்டு பறப்பது போன்ற ப்ரூச் பதிக்கப்பட்டிருந்தது. அவர் பாடல் பாடிய போது அந்த தங்க ப்ரூச் தகதகவென ஜொலித்தது. அந்த ஆடையை வடிவமைத்தவர் டேனியல் ரோஸ்பெர்ரி.


அவர் நீல நிறத்தில் காஷ்மீரி ஃபிட்டட் ஜாக்கெட், லாங் ஸ்லீவ் , சிவப்பு நிறத்தில் விரிந்த பிரமாண்ட ஸ்கர்ட் அணிந்திருந்தார். அதோடு கருப்பு லெதர் கிளவுஸ் என அவருடைய ஆடை பார்ப்பவர்களின் கண்களைக் கவர்ந்தது. எப்போதும் போல அவருடைய மேக்அப் பிரகாசிக்கும் ஹைலைட்.


அந்த ஆடையின் ஹைலைட்டே அந்த புறாதான். அதை ஏன் பதித்தார் என்றும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதற்கு காரணம் அனைவரும் அமைதியை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு பதித்துள்ளார்.