கேரளா என்றாலே இயற்கை எழில் சூழ்ந்த, காணும் இடமெல்லாம் பசுமை சூழ்ந்த நிலங்கள், மலைப்பரப்புகள், காடுகள், பாரம்பரியமான கேரள உணவுகள் மற்றும் கேரள பெண்கள் ஆகியவை தான் நினைவுக்கு வரும்! கேரள பெண்கள் என்றாலே, சந்தன நிற, வெண்ணிற சேலைகள் தான் நினைவுக்கு வரும். எப்படி தமிழ்நாட்டில் காஞ்சி பட்டு, ஆரணி பட்டு பெயர் பெற்றிருக்கிறதோ அதேபோல கேரளாவில் கசவுப்பட்டு என்ற கைத்தறி சேலை மிகவும் புகழ்பெற்றது. கேரளாவின் பாரம்பரிய சேலைகளில் ஒன்று தான் கசவுப்பட்டு.
கேரளாவின் பெரும்பாலான பண்டிகைகளில் கசவு பட்டு கட்டி அழகிய கேரளப் பெண்கள் ஒவ்வொரு விசேஷத்தையும் கொண்டாடுவார்கள். பாரம்பரியமான தங்க இழைகள் கொண்டு கைத்தறியில் நெய்யப்படும் புடவை தான் கசவு. எந்த டிசைனும் இல்லாமல், வெண்மை, சந்தன ஷேடுகளில் மெல்லிய தங்க ஜரிகையுடன் உருவாக்கப்படும். ஆனால் காலமாற்றத்திற்கு ஏற்றவாறு, பாரம்பரியம் மாறாமல் அதே நேரத்தில் புதிதான பலவித டிரெண்டுகளும் சேர்க்கப்பட்டு வருகிறது. வியாற்றில் கையால் வரையப்பட்ட ஓவியங்கள், எம்ராய்டரி, அகலமான ஜரிகை, கற்கள் பதிக்கப்பட்ட மோட்டிஃப் உள்ளிட்ட பல வகையான கசவு சேலைகள் கிடைக்கின்றன. இந்த ஆண்டு ஓணம் 2022க்கு டிரெண்டில் உள்ள கசவு சேலைகள் பற்றி பார்க்கலாம்.
கேரள காட்டன் கசவு புடவைகள் : விசேஷங்களுக்காக பெண்கள் கட்டிக் கொள்ளும் பெரும்பாலான கசவு புடவைகள் பட்டு புடவைகள் தான். அவற்றை கவனமாக பராமரிக்கவும் வேண்டும். ஆனால் பாரம்பரிய பண்டிகைகளுக்கு எப்பொழுதுமே பட்டு தான் உடுத்திக் கொள்ள வேண்டுமா என்ன? வசதியாகவும் நேர்த்தியாகவும் அழகை மேலும் மெருகூட்டவும், பருத்தியாலான கசவு சேலைகளை இந்த ஆண்டு கட்டிக் கொள்ளலாம்.
அகலமான பார்டர்கள் கொண்ட கசவு புடவைகள்: கசவு சேலைகளில், அதன் பார்டர் மெலிதாக தான் பெரும்பாலும் இருக்கும். தங்க நிறத்தில், அரக்கு, பச்சை ஆகிய நிறங்களில் தான் பார்டர்கள் இருக்கும். ஆனால் எப்பொழுதுமே அதே போல சேலை அணிந்தால் அலுப்பாக இருக்காதா? ஒரு மாற்றாக இந்த ஓணத்திற்கு அகலமான பார்டர்கள் கொண்ட ஜரிகை வேலைகள் நிறைந்த கசவு சேலையை அணிந்து பாருங்கள். வழக்கமாக மெல்லிய பார்டர்களுடன் கிடைக்கும் கசவு சேலையை வாங்கி, நீங்கள் விரும்பும் நிறத்தில் பார்டர்களையும் வாங்கி தைத்துக் கொள்ளலாம்.
எம்ப்ராய்டரி வேலைப்படுகள் நிறைந்த தூய கசவுப் பட்டு: மேலே குறிப்பிட்டுள்ளது போல எம்ப்ராய்டரி ஆடைகளுக்கு என்று தனி மதிப்பு மற்றும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. எம்ராய்டரி செய்யப்பட்ட ஆடைகள் தனி அழகைக் கொண்டிருக்கும். மிக அழகாக தெரியும் தூய பட்டாலான கசவுப் புடவைகளில் எம்ப்ராய்டரி வேலைகள் சேர்த்து அணியும் பொழுது அழகான ரம்யமான தோற்றத்தை பெறுவீர்கள். எம்பிராய்டரி பார்டர்கள் மற்றும் தலைப்பில் மட்டும் இருக்குமாறும் கிடைக்கிறது. புடவை முழுவதிலும் எம்ப்ராய்டரி இருப்பது போன்ற புடவைகளையும் தேர்வு செய்து அணியலாம்.
டிசைன் மோடிஃப்கள் கொண்ட கசவு பட்டுப் புடவைகள்: பொதுவாகவே கசவு புடவைகள் என்று வரும்போது அதில் எந்த டிசைனும், இருக்காது, பிளைனாக இருக்கும். எப்போதுமே அவ்வாறு அணியாமல், இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு, பூக்கள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு பேட்டர்ன்களை கொண்ட புடவையை அணியலாம். உதாரணமாக வெண்பட்டு புடவையில் மயில் மோட்டிஃபை சேர்த்து அழகிய பெண் மயிலாய் தோற்றம் அளிக்கலாம். அதே போல கசவு புடவையில் தங்க நிறம், பச்சை நிறம், பிரவுன் நிறம் உங்கள் பார்டருக்கு ஏற்ற நிறத்தில் பூக்கள் பேட்டர்ன் கொண்ட மோட்டிஃப்களை பயன்படுத்தி அணியலாம். வழக்கமாக பிளைன் கசவு பட்டு அணிவதை விட இது மேலும் நளினத்தை மெருகூட்டி உங்கள் அழகை மேம்படுத்தி காட்டும்.