நடிகர் கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்தமான ஃபேஷன் லேபில் ஒன்றை அறிமுகம் செய்தார். அல்ட்ரா மாடர்ன், ஸ்டைலிஷான, நவீனமான தோற்றம் கொடுக்கும் ஆடைகளுக்கு, இளைஞர்கள் விரும்பும் உடைகளை, கைத்தறி நெசவு மூலமாகவே செய்ய முடியும் என்பதை உண்மையாக்கியுள்ளார். இந்தியாவின் கைத்தறி நெசவுக்கு தனது பிராண்டு மூலம் புத்துயிர் அளித்த நடிகர் கமல்ஹாசன், காதி, கதர் ஆடைகளை உலகம் முழுக்க ப்ரமோட் செய்தும் வருகிறார். விரைவில், KH பிராண்டு சுமந்த காதி ஆடைகள் கடைகளில் கிடைக்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
KamalHassan House of Khaddar (KHHK) என்ற இவரது சொந்தமான பிராண்டு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தான் பங்கேற்கும் பல நிகழ்ச்சிகளில் நடிகர் தனது பிராண்டில் தயாரிக்கப்பட்ட கதர் ஆடைகளை அணிந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 ஆண்டுகளாக தொகுத்து வரும் இவர், பெரும்பாலான நாட்களில் KHHK பிராண்டு ஆடைகளையே அணிந்து வந்துள்ளார். பலருக்கும் தனது டிசைனர்களை வைத்து கதர் ஆடைகளை டிசைன் செய்து பரிசாக வழங்கியுள்ளார். நெசவுத் தொழில் அழிந்து விடக்கூடாது என்ற இவரது முனைப்பு மற்றும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
காதி ஆடைகளை எவ்வளவு மார்டனாக வேண்டுமானாலும் வடிவமைக்க முடியும் என்பதை இவரின் பிராண்ட் நிரூபித்துள்ளது. பொது நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச ஃபேஷன் ஷோக்களிலும் தனது பிராண்டை அறிமுகம் செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, உலகின் ஃபேஷன் தலைநகராக கருதப்படும் பாரீசில் நடைபெற்ற பாரீஸ் ஃபேஷன் வீக் நிகழ்வில், தனது Warp and Weft என்ற கலக்ஷனை அறிமுகம் செய்துள்ளார். அதே போல, நியூயார்க் ஃபேஷன் வீக்கிலும் ஏற்கனவே பிராண்டு அறிமுகம் நடந்துவிட்டது.
தொடக்கமே மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த நிலையில், அமெரிக்காவில், பல இடங்களில் ரீடெயில் விற்பனை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ரீடெயில் விற்பனையை தொடங்க வேண்டும் என்ற நேரடியாக ஆன்லைன் மார்க்கெட் ஆன்லைன் விற்பனை வழியாக வாடிக்கையாளர்களை சென்றடைய வேண்டும் என்ற திட்டத்தில் பிராண்டு இயங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சென்னையிலிருக்கும் கொலாஜ் என்ற ஒரு பொட்டிக்கிலும், இந்த பிராண்ட் ஆடைகள் கிடைக்கின்றன.
நடிகர் கமல்ஹாசன், பிரபல பேஷன் டிசைனரான அம்ரிதா ராம் உடன் இணைந்து உருவாக்கியதுதான் ஹவுஸ் ஆஃப் காதர் பேஷன் லேபிள் ஆகும். முதல் முயற்சியிலேயே பிரண்டு சிறப்பாக வெற்றியாக இருப்பதால், இந்தியா முழுவதுமே அடுத்ததாக அறிமுகம் செய்ய வேண்டுமென்ற திட்டத்திலும், அதன் பிறகு மத்திய கிழக்கு நாடுகளில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் இந்த ஃபேஷன் லேபில் மிக குறைந்த காலத்திலேயே, பெரிய வளர்ச்சி அடைந்திருப்பதும், ஒரு முன்னோடியாக உருவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றி பேஷன் டிசைனரான அம்ரிதா ராம் கூறுகையில் “KHHK உடன் கடந்த ஓராண்டு மிக அற்புதமான பயணமாக இருந்தது. கடந்த ஆண்டு சிகாகோவில் குளிர்காலத்தில் பிராண்டை அறிமுகம் செய்தோம். 2022 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே கதர் ஆடைகளை அறிமுகம் செய்து மிகப்பெரிய ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாரிஸ் ஃபேஷன் வீக்கில் கதர் மற்றும் டெனிம் இரண்டையுமே கலந்து, ஃபியூஷன் ஆடைகளை அறிமுகம் செய்திருக்கிறோம். அது மட்டும் இல்லாம லாஸ் வேகாஸ் கன்வென்ஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிராண்டை அறிமுகம் செய்துள்ளோம். சிகாகோவில் எட்டு இடங்களில் விற்பனை நடக்கிறது.
அதுமட்டும் அல்லாமல் நியூயார்க்கில் சஸ்டைனபல் சீரிஸ் என்ற பேஷன் வீக்கில் கலந்து கொண்டதன் மூலம் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது! காதி ஆடைகளை புதுமையாக, நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதன் மூலமாக பிராண்டை தொடங்கினோம். இது மிக மிக உற்சாகமாக இருக்கிறது. அதேபோல நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பயணிப்பது அற்புதமாக இருக்கிறது. இவருடைய தொலைநோக்கு பார்வை, கருத்துக்கள் எப்பொழுதுமே தவறாக போகாது! போட்டோ ஷூட் முதல் ஒரு கலெக்ஷனுக்கு எதையெல்லாம் அறிமுகம் செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுப்பது வரை இவர் எல்லாவற்றிலும் மிஸ்டர் ரைட் தான்!
அது மட்டுமில்லாமல் தன்னுடைய கருத்துகளை கூறும்போது அது மிகவும் வேடிக்கையாகவும், தனித்துவமாகவும், ஸ்பெஷலாகவும் இருக்கும். நாங்கள் தற்போது கொலாஸ் என்ற ஒரு பிரசித்தி பெற்ற ஸ்டோரில் எங்கள் பிராண்டை அறிமுகம் செய்திருக்கிறோம். இது பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட கலெக்ஷன்கள் மட்டும் விற்பனை செய்யும் கடையாகும். அடுத்த ஆண்டுக்கு இன்னும் பல திட்டங்கள் இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.