இந்திய ஆடைகளுக்கு உலக அளவில் எப்போதும் தனியிடம் உண்டு. அதனால்தான் வெளிநாட்டினர் இந்தியா வந்தாலும் முதல் வேலையாக இந்திய ஆடைகளை அணிந்து அழகுப் பார்ப்பார்கள். அதிக வேலைபாடுகளுடன் , கண்கவர் வண்ணங்களுடன் இருக்கும் ஆடைகளை ஒவ்வொரு ஆண்டும் துள்ளியமாக செதுக்கி வடிவமைப்பதில் டிசைனர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அது காலம் தழுவி இன்று பெண்களின் ஆடை ஸ்டைலையே மாற்றியுள்ளது. வெஸ்டர்ன் வியரில் மட்டுமல்ல பாரம்பரிய உடைகளிலும் ஃபியூஷன் ஸ்டைலில் கலக்கலாம் என்பதை சாத்தியமாக்கியுள்ளது. அப்படி இளஞ்சிட்டுகள் தொடங்கி மடந்தையர் வரை ஈர்த்த இந்த ஆண்டு அதிகம் டிரெண்டான ஆடைகள் குறித்த தொகுப்பே இந்த கட்டுரை.
ஒன் பீஸ் ட்ரெஸ் : முழு கை வைத்து ஒரே ஆடையாக தரையைத் தொடும் அளவு இருக்கும் இந்த ஆடை முக்கிய நிகழ்வுகளில் முக்கிய இடம் பிடித்திருந்தது. பார்ட்டி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இந்த ஆடையைக் காண முடிந்தது. இந்த ஆடை அதிக வேலைபாடுகள் கொண்ட கிராண்ட் லுக்கிலும், மினிமலான வேலைப்பாடுகளிலும் கிடைக்கின்றன. குறிப்பாக சுங்கடி புடவைகளில் ஒன் பீஸ் ஆடைகள் சரிகை பார்டர்களுடன் வலம் வருவதையும் தவிர்க்க முடியாது.
பிரைடல் லெஹங்கா செட் : மணப்பெண் என்றாலே புடவைதான் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை தகர்த்த பெருமை லெஹங்காவிற்கு உண்டு. அப்படி வரவேற்பு நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பிடித்த இந்த ஆடை பிரிண்டட் லெஹங்கா, புடவை ஸ்டைல் லெஹங்கா, ஹாஃப் ஷோல்டர் லெஹங்கா, ஸ்லிட் கட் லெஹங்கா, நெட் ஜாக்கெட் லெஹங்கா இப்படி எண்ணற்ற வடிவமைப்பு மற்றும் கட்ஸுகளில் கிடைக்கின்றன.
குர்த்தா வகை : பெண்களின் மிக சௌகரியமான ஆடைகளில் குர்த்தாவும் ஒன்று. அதனால்தான் டிசைனர்கள் குர்த்தாவிலேயே எண்ணற்ற கட்ஸ் மற்றும் வேலைபாடுகளை உருவாக்கி வெளியிடுகின்றனர். அப்படி இந்த வருடம் நெட்டட் குர்த்தா, ஜாக்கெட் ஸ்டைல் குர்த்தா, கோல்ட் ஷோல்டர் குர்த்தா, நேரு காலர் குர்த்தா, ஹைலோ குர்த்தா, ஸ்ட்ரெய்ட் குர்த்தா, ஸ்லிட் குர்த்தா, லேயர்டு குர்த்தா என கணக்கில்லா அளவில் டிரெண்டானது.