ஆப்ரிக்க நாடான எகிப்து என்பது பலமுறை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். போன வருடம் கூட சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியபோது எகிப்து பற்றி உலக நாடுகளே கவலைப்பட்டது. அப்படிப்பட்ட நாட்டில் பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. வறண்ட நிலமாக இருக்கும் நாட்டில் புதிதாக ஒரு முயற்சியை எடுத்துள்ளனர். சுற்றுலா மற்றும் வாழ்வாதாரமாக மாற இருக்கும் முயற்சியைப் பற்றி தான் சொல்ல இருக்கிறோம்.
எகிப்து நாடு என்பது கடல் சூழ்ந்த பகுதியாக இருந்தாலும் அது ஒரு வறண்ட நிலப்பரப்பை கொண்ட நாடு தான். அதன் தண்ணீர் தேவை என்பது அதிகரித்துக்கொண்டு வருகிறது. இங்குள்ள நதி மற்றும் அதன் நீர் ஆதாரம் என்று பார்த்தாலும் மிகக்குறையவே. அதனால் அந்த நாட்டில் புதிதாக ஒரு செயற்கை நதியை உருவாக்கி வருகின்றனர். செயற்கை ஆறா என்று ஆச்சரியப்படுகிறீர்களா?
உருவாக்கப்படும் ஆறு என்பது சாதாரணமாக 5-10 கிலோமீட்டருக்கு தோண்டி உருவாக்கும் கால்வாய் போன்ற நதி இல்லை . சுமார் 114 கிலோமீட்டர் நீளமான செயற்கை நதியை அமைக்க எகிப்து திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் உலகிலேயே மிக நீளமானது என்று தரவுகள் குறிப்பிடுகின்றன. அதுமட்டும் இல்லாமல், இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 160 பில்லியன் எகிப்திய பவுண்டுகள் - அதாவது 5.25 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வகையான திட்டத்திற்கு "புதிய டெல்டா" என்று பெயர் வைத்துள்ளனர். எகிப்தின் எதிர்காலம் பசுமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது எகிப்தின் எல்-டபா ஆக்சிஸின் தெற்கே திட்டமிடப்பட்டுள்ள பெரிய தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
வறட்சியின் காரணமாகவும், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலின் விளைவாக உணவு பொருட்களின் விலை அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. எகிப்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் இறக்குமதி விலைகளை சமாளிக்க புதிய வழி தேடி தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இது மூலோபாய பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என்று அரசு தரப்பு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே விலையுயர்ந்த பொருட்களின் இறக்குமதியை குறைக்க உதவும். உலகின் மிகப்பெரிய கோதுமை இறக்குமதியாளராக எகிப்து இருப்பதால், எகிப்தில் விவசாய நிலத்தின் அளவை அதிகரிப்பதே திட்டத்தின் முதன்மையான இலக்கு. இந்த செயற்கை நதி மூலம் அதற்கு அருகில் விவசாயம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆதாரங்களின்படி, எகிப்திய திட்டத்தின் ஒரு பகுதியாக 2.2 மில்லியன் ஏக்கர் விவசாய நிலம் புதிதாக உருவாக்கப்படும். மேலும் இந்த செயற்கை நதிக்கான நீர் ஆதாரமாக நிலத்தடி நீர் மற்றும் மறுசுழற்சி செய்யப்படும் விவசாய வடிகால் நீர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது எகிப்து பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அந்நாட்டின் தலைவர்கள் கூறுகின்றனர்.