விமானத்தில் செல்ல வேண்டும் என்பதை நினைத்தவுடன் படபடப்பு ஏற்படுகிறதா? வியர்த்துக் கொட்டுகிறதா? விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக வெகு விரைவாகவே சிலர் விமான நிலையம் சென்று காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களில் நீங்களும் ஒருவராகக் கூட இருக்கலாம். இருப்பினும், விமானப் பயணங்களின் போது அச்சத்தை தவிர்த்து, மகிழ்ச்சியுடன் பயணத்தை நிறைவு செய்வதற்கான டிப்ஸ் இந்த செய்தியில் இருக்கின்றன.
காஃபி மற்றும் மதுபானங்களை தவிர்க்கவும்: நீங்கள் விமான பயணம் மேற்கொள்ள இருக்கிறீர்கள் என்றால், அதற்கு முன்னதாக காஃபி மற்றும் மதுபானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது உங்கள் உடலில் நீர்ச்சத்தை இழக்கச் செய்யும். இது மட்டுமல்லாமல் உங்கள் கவலைகளை அதிகரிக்கும். மது அருந்திவிட்டு விமானப் பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் உடல் ஒத்துழைக்காமல் போகலாம். ஆகவே, இதை தவிர்க்க வேண்டும்.விமான பயணத்திற்கு முன்பாக திரவ ஆகாரங்கள் மற்றும் லேசான உணவுகளை உட்கொள்ளலாம் அல்லது விமானத்தில் சாப்பிடும் வகையில் கேரட், ஆப்பிள், நட்ஸ் போன்றவற்றை எடுத்து செல்லலாம்.
விமானத்தின் சத்தங்களை புரிந்து கொள்ள வேண்டும் :ஒரு விமானப் பயணம் முழுவதிலும் வெவ்வேறு விதமான சத்தங்களை நீங்கள் கேட்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு சத்தமும் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக அமையும். குறிப்பாக விமானம் தரையிறங்கும் போது, மிகுந்த அதிர்வு கொண்ட சத்தம் ஒன்றை நீங்கள் கேட்பீர்கள். ஏதோ விமானத்தின் டயர்கள் வெடித்து விட்டதைப் போல நீங்கள் உணர்வீர்கள். ஆனால், இது இயல்பாக வரும் ஒலிதான். ஆகவே, விமானத்தில் எந்தெந்த சமயத்தில் என்ன மாதிரியான ஒலிகள் எழும்பும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும் : கடினமான சூழலில் உங்கள் உடலை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கான உத்திகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். தொடர்ந்து மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும். இது உங்களுக்கு சௌகரியத்தை கொடுக்கும். ரிலாக்ஸாக அமர வேண்டும். இருக்கையின் கை பிடிகளை இறுகப்பிடித்து அமரக் கூடாது. அது கவலைகளை அதிகரிக்க செய்யும்.
அருகில் இருக்கும் மக்களுடன் அறிமுகம் ஆகலாம் : பயணத்தின் போது உங்களுக்கு ஏற்படும் அச்சம் குறித்து அருகில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உங்கள் அச்சத்தை போக்குவது எப்படி என்ற நன்கு பயிற்சி பெற்றவர்களாக பணிப்பெண்கள் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு சிறப்பு கவனம் கொடுத்து உதவி செய்வார்கள். உங்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் நபரிடம் இதுகுறித்து பேசலாம். அவர்களது பயண அனுபவம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
கவனத்தை திசை திருப்பவும் : விமானத்தில் பயணம் செய்யும்போது பொழுதுபோக்கு டிவைஸ்களை கையோடு கொண்டு செல்லலாம். பயணத்தின் மீதான அச்சத்தில் இருந்து உங்கள் கவனத்தை திசை திருப்பி, ரிலாக்ஸாக இருக்க இது உதவும். புத்தகங்களை கொண்டு சென்று வாசிக்கலாம். உங்கள் ஃபோன் அல்லது ஐபேடில் பிடித்தமான படங்களை டவுன்லோடு செய்து வைத்திருந்து பார்க்கலாம். பல விமானங்களில் நீங்கள் படம் பார்ப்பதற்கான பிரத்யேக ஸ்கிரீன் வசதி இருக்கும். அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.