10, 15 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமியர்கள் இருக்கும் எந்தவொரு வீடும் எப்போதுமே கலகலப்பாக இருக்கும். அவர்கள் மட்டும் விடுமுறைக்கு உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுவிட்டால், வீடே வெறிச்சோடி போய்விடும். அந்த அளவுக்கு எப்போதுமே சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டும், அவ்வபோது சின்னஞ்சிறு சண்டை போட்டுக் கொண்டும் இருப்பதுதான் குழந்தைகளின் அடிப்படை குணாதிசயம் ஆகும். என்னதான் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டாலும், அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் உடனடியாக ஒற்றுமையாகி, அன்பை பகிர்ந்து வாழ்வது குழந்தை குணத்தின் சிறப்பு ஆகும். சில சமயம் பெற்றோர் அல்லது பெரியவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைக்க வேண்டியிருக்கும். நீங்கள் சின்ன வயதில் என்னென்ன சண்டை போட்டீர்கள் என்பதை நினைவுபடுத்தி பாருங்கள். அதனுடன் ஒத்துப் போகும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
யாருடைய டிரெஸ் நல்லா இருக்கு : குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப, பாரபட்சம் இன்றி பெற்றோர் புத்தாடைகளை வாங்கி கொடுத்திருப்பார்கள். ஆனால், உடன் பிறந்தவர்கள் மத்தியில் இதுதொடர்பாக மாபெரும் போர் வெடிக்கும். அவன் அல்லது அவளுக்கு மட்டும் நல்ல டிரெஸ் வாங்கி கொடுத்துள்ளீர்கள் என புகார் கூறி அடம்பிடிக்காத குழந்தைகள் இருக்க முடியாது. சில சமயம், குறிப்பிட்ட ஆடையை யார் எடுத்துக் கொள்வது என்பது குறித்து சகோதரர்களுக்குள் அல்லது சகோதரிகளுக்குள் பெரிய களேபரமே நடக்கும்.
பட்டப்பெயர் வைத்து அழைப்பது : ஆசை, ஆசையாய் பெற்றோர் வைத்த அழகான பெயர்களை சொல்லி உடன் பிறந்தவர்களை நாம் அழைப்பதில்லை. நமக்கு பிடித்தமான பட்டப் பெயரை அவர்களுக்கு சூட்டுவதுடன், அவ்வபோது அதை சொல்லி அவர்களை நோஸ்கட் செய்வதில் எல்லோருக்கும் அலாதி பிரியம் இருக்கும். சில வீடுகளில் பிள்ளைகள் வளர்ந்து, பெரியவர்களாகிய பின்னரும் கூட இந்தப் பட்டப்பெயர்கள் நீடித்து நிற்கும்.
ஒரு பொருளை யார் முதலில் பயன்படுத்துவது : வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்கான சைக்கிள், வீடியோ கேம் அல்லது டேப்லட் போன்றவை ஒன்று மட்டும் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அதை யார் முதலில் பயன்படுத்துவது என்று வாக்குவாதம் ஏற்படும். நான் தான் பெரியவன், எனக்கு முதலில் என மூத்த பிள்ளைகள் வாதிடுவார்கள். ஆனால், இளைய குழந்தைகள் அழுது, அடம்பிடித்து பெற்று விடுவார்கள்.