தங்களை அறியாமலேயே ஒரு கட்டத்தில் என்ன செய்தாலும் தவறு என்று அப்பா மகன்களுக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படுவதும் சகஜம் தான். மிகவும் கண்டிப்பாக இருப்பது, ஆண் என்ற தோரணையை வீட்டில் வெளிப்படுத்தி டாமினேட் செய்வது என்று மோசமான உதாரணங்களும் உண்டு. ஆனால் எல்லா மகனுக்குமே தன்னுடைய அப்பாதான் முதல் ஹீரோ. அந்த வகையில் தன் அப்பாவிடம் இருந்து இந்த ஏழு விஷயங்களை கேட்க வேண்டும் என்று ஒவ்வொரு மகனும் விரும்புகிறார்.
தனக்கு முன்னுரிமை அளிப்பதில் தவறில்லை : சமூகத்தில் பெண்களுக்கு சில விஷயங்கள் தவறாக கட்டமைக்கப்பட்டுள்ளது போலவே ஆண்களுக்கும் உள்ளது. உதாரணமாக ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் குடும்பத்தை, குடும்ப பாரத்தை தாங்கி கொள்ள வேண்டும், மற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தன்னுடைய மகிழ்ச்சியை குறைத்துக் கொண்டு அல்லது தவிர்க்கும் ஆண்கள் பலர் உள்ளனர். ஆனால், உங்கள் மகனுக்கு நீங்கள் இந்த விஷயத்தில் முன்னுதாரணமாக இருக்க கூடாது. எல்லா நேரங்களிலும் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது. எனவே தனக்கு பிடித்ததை செய்வதும், தன்னுடைய மகிழ்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது தவறில்லை என்பது நீங்கள் உங்கள் மகனுக்கு தெரிவிக்க வேண்டும்.
கண்ணாடி போல நடந்து கொள்ள வேண்டும் : நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அதன்படி நீங்கள் நடக்க வேண்டும். இது பொதுவாக எல்லா இடங்களிலும் எல்லா உறவுகளுக்கு இடையேயும் பொருந்தும். எனவே அப்பா மகன் உறவு என்று வரும் பொழுது இதற்கு மட்டும் விதிவிலக்கு என்று நினைத்துவிடக்கூடாது. எனவே உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதே போல நீங்கள் உங்கள் மகனை நடத்த வேண்டும்.
நம் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை : எல்லா குழந்தைகளுமே குழந்தைகளுக்குமே இந்த உலகம் மிக மென்மையானது, வாழ்க்கை கடினமானது இல்லை என்ற எண்ணத்தோடு பிறக்கிறார்கள். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல என்பதை நீங்கள் உணர்த்த வேண்டும். சில விஷயங்கள் நம்முடைய கட்டுப்பாடுகளையும் மீறி நடக்கும் என்பதையும் நீங்கள் உங்கள் மகனுக்கு புரிய வைக்க வேண்டும்.
உன்னை புரிந்து கொள்கிறேன் : ஒரு ஆண் பிள்ளையின் மேல் எவ்வளவு பேர் அன்பாக நடந்து கொண்டாலும் தந்தையிடம் இருந்து கிடைக்கும் பாராட்டும் அன்பும் கொஞ்சம் ஸ்பெஷலானது தான். முந்தைய தலைமுறையில் இருந்தது போல எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடாது என்ற சூழல் இப்பொழுது இல்லை. எல்லா உறவுகளுமே கொஞ்சம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனவே உங்கள் மகனை நீங்கள் நேசிக்கிறீர்கள் மற்றும் அவனை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், என்பதை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். தந்தையின் ஆதரவு இருக்கிறது என்பது மிகப்பெரிய பலத்தை தரும்.
எவ்வளவு முறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம் : பெற்றோருக்கு குழந்தைகள் மீது ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை எப்போதுமே தன்னுடைய பிள்ளைகளால் நிறைவேற்ற முடியாது. அதிலும் குறிப்பாக மகன் வளர்ந்து வரும் பருவத்தில், நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த நேரத்தில் மகனை காயப்படுத்தாமல் அல்லது தாழ்த்தி பேசாமல் முயற்சி செய்யவேண்டும் என்று ஊக்குவிக்க வேண்டும். தன்னுடைய திறமையை உணராத பிள்ளைக்கு அதை தந்தை எடுத்து உணர்த்துவது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அப்பா மகன் உறவு இந்த காலகட்டத்தில் பலப்படும் அழகான உறவாக மாறும்.
தவறு செய்வது இயல்பு : அப்பா என்றால் எந்த தவறுமே செய்யமாட்டார் அல்லது மிகவும் பர்ஃபெக்ட் ஆக நடந்து கொள்வார் என்ற விஷயங்களை குழந்தைகள் வளரும் பொழுதே அவர்கள் மனதில் விதைத்துவிடுகிறார்கள். ஆனால் மனிதர்களாக இருக்கும் அனைவருமே ஏதோ ஒரு கட்டத்தில் தவறு செய்வோம். எனவே ஒரு அப்பாவாக நீங்கள் 100% கச்சிதமானவர் கிடையாது. நீங்களும் தவறு செய்தாலும், தவறுகளில் இருந்து திருத்திக் கொள்வீர்கள் என்பதை உங்கள் மகனுக்கு புரிய வைக்க வேண்டும்.