சிரிப்பு மிகச்சிறந்த மருந்து என பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உண்மையில் நாள்தோறும் எத்தனை முறை சிரிக்கிறோம்?. யோசித்து பார்த்தால் ஒரு நாளைக்கு ஒருமுறை என்பதே அரிது என்பது பலரின் பதிலாக இருக்கும். உண்மையில், சிரிப்பு, மனதை மட்டும் மகிழ்ச்சியாக வைத்திருக்காமல், உடல் புத்துணர்ச்சியாக இருக்கவும் உதவுகிறது. மற்றொருபுறத்தில் எதிர்மறை எண்ணங்கள் சிந்தனைகளையும் சீர்குலைத்து, உடல்நலனையும் கெடுக்கிறது.
நீண்டகாலமாக எதிர்மறை எண்ணங்கள் இருப்பவரின் தோல்கள், விரைவாக வயதான தோற்றத்தை பெறும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அழகியலும், மனமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு இருப்பதால், மன அழுத்தம், கோபம் ஆகியவை புற அழகை பாதிக்கும். உங்களுடைய தோற்றத்தை வைத்து மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ள முயல்வார்கள் என்பதால், புற தோற்றத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
மன அழுத்தம் : மன அழுத்தத்துக்கும், தோலுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மன அழுத்தத்தில் இருப்பவரின் முகம் மற்றும் தோல்கள் சோர்வாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். பார்ப்பவர்களுக்கு உங்கள் மீது எதிர்மறையான எண்ணங்கள் உருவாகுவதற்கும் இதுவே முதன்மையான காரணம். மன அழுத்தம் நீண்ட நாட்களாக இருந்தால், புதிய செல்கள் உருவாவதில் குறைபாடு ஏற்படும். வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன்கள் அதிகளவு உற்பத்தியாகும். தோல்சார்ந்த மற்ற பிரச்சனைகளும் அதிகரிக்க தொடங்கும். முறையாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு, பல்வேறு தோல் வியாதிகளுக்கு உள்ளாக நேரிடும். மன அழுத்தம் இருக்கும்போது ரத்தநாளங்களும் பாதிக்கப்பட்டு, புது ரத்தம் செல்வதில் தாமதம் உருவாகும். இதனால், உங்களின் புற அழகு குறிப்பிட்ட கால இடைவெளியில் பாதிக்கப்படும்.
கோபம் : நீங்கள் அடுத்த முறை உங்கள் தாய் அல்லது வேறொருவரிடம் கோபம் கொள்ளும்போது முகத்தின் அசைவுகளை கவனித்துப் பாருங்கள். கோபத்தில் தோல்கள் விரைவாக மாற்றமடைந்து, சுருக்கம் மற்றும் சோர்வை முகத்தில் காட்டும். அவற்றுக்கு முக்கிய காரணம் கோபமடையும்போது உடலில் இருக்கும் செல்கள் கார்டிசோல் ஹார்மோன்களை வேகமாக உற்பத்தி செய்கின்றன. இவை தோலின் பிரகாசத்தைக் குறைத்து சுருக்கத்தை விரைவாக ஏற்படுத்துகின்றன.
கவலை : நீண்ட காலமாக ஏதாவதொன்றைப் பற்றி நினைத்து கவலையுடன் இருப்பவர்களின் புருவத்தில் விரைவாக சுருக்கங்களை ஏற்படுத்தும். எந்த கவலையும் இல்லாதவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்காது. தொடர் கவலைகள் முகத்தில் மற்றும் புருவத்தில் சுருக்கங்களை மட்டும் ஏற்படுத்தாமல் உயிரணுக்களையும் பாதிக்கின்றன. அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் உடலில் குறைக்கின்றன. இதனால், தூக்கம் இருக்காது, கண்கள் சிவந்து காணப்படும் அல்லது வீங்கி இருக்கும். எப்போதும் சோர்வுடன் காணப்படுவார்கள்.
பயம் : நீங்கள் அச்சுறுத்தப்படுவதாக அல்லது ஆபத்தில் இருப்பதாக உணரும்போது, மூளையின் முதல் எதிர்வினை அட்ரினலின் சுரப்பிகளுக்கு சிக்னல் கொடுக்கும். இதன் விளைவாக, இதய துடிப்பு வேகம் அதிகரிக்கிறது, தசைகளுக்கு ரத்தத்தை செலுத்தும் வேகம் அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில் இருப்பவரின் உடலில், தசைகளுக்கு தேவையான ரத்தத்தை முகம் மற்றும் தோல்களில் இருந்தும் எடுக்கப்படுவதால், அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் சோர்வுடன் இருப்பார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது? : எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே உடலில் புற அழகையும், உடல் நலனையும் அதிகளவில் பாதிக்கின்றன. இதனால், தேவையற்ற எண்ணங்களை முற்றிலுமாக களைந்து மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கான செயல்களை செய்ய வேண்டும். நாள்தோறும் உடற்பயிற்சி, யோகா ஆகியவை மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.