தற்போது பருவமழை காலம் அதிகரித்து வருகிறது. கோடை கால வெயிலில் இருந்து நாம் தப்பித்தாலும் மழைக்காலத்தில் நிலவும் ஈரத்தன்மை சில அசவுரியங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பல்வேறு சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. இதனால் அடிக்கடி முகப்பரு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது நமது சருமத்தில் உள்ள பொலிவை நீக்கி சோர்வை தருகிறது. பருவமழை காலத்தில் பின்பற்ற வேண்டிய பராமரிப்பு நடவடிக்கைகளை சரியாக செய்தால் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மொஹாலியின் மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஆலோசகரும், தோல் மருத்துவருமான டாக்டர் விக்ரம் லஹோரியா எம்.டி இதுகுறித்து சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். பருவமழை காலத்தில் அதிகப்படியான ஈரப்பதம் தோன்றுவதால் சருமத்தை பிசுபிசுப்பாக மாற்றுகிறது. மேலும் ஈரமான வானிலை பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்ற பல்வேறு நோய்த்தொற்றுகளின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இதனால் ஓபன் போர்ஸ் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. தற்போதைய கொரோனா காலத்தில் நாம் முகக்கவசங்களை அணிந்திருக்கிறோம், இது சரும பாதிப்புகளை மேலும் அதிகரிக்கிறது.எனவே மழைக்காலத்திலும் பொலிவான சருமத்தை தக்கவைத்து கொள்ள பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகள் குறித்து இங்கு காண்போம்.
1. நீரேற்றமாக இருங்கள்: ஆரோக்கியமான சருமத்திற்கு நீரேற்றமாக இருப்பது அவசியமானது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமம் பொலிவாக இருக்கவும் உதவுகிறது. மழைக்காலத்தில் பெரும்பாலும் தாகம் ஏற்படாது என்பதால் பலரும் தண்ணீர் அருந்துவதில்லை. இதனால் சருமம் வறட்சியடையும். எனவே பழச்சாறுகள், எலுமிச்சை ஜூஸ் போன்ற திரவ உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
3. எண்ணெய் உணவுகள் வேண்டாம் : பருவமழை காலத்தில் சூடான எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால் எண்ணெய் உணவுகள் , கடைகளில் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்களை வாங்கி சாப்பிடுவதால் முகப்பருக்கள் ஏற்படலாம், இதனால் நமது சருமம் மந்தமாக இருக்கும் என்று டாக்டர் விக்ரம் கூறுகிறார்.மேலும் மழைக்காலத்தில் சரும பொலிவை மேற்கொள்ள அருந்த வேண்டிய பானங்கள் குறித்தும் டாக்டர் விக்ரம் விளக்கியுள்ளார். அதுகுறித்து இங்கு காண்போம்.
கிரீன் டீ :கிரீன் டீ தற்போது பெரும்பாலானோர் அருந்தக்கூடிய மிகவும் பிரபலமான டிடாக்ஸ் பானங்களில் ஒன்றாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால் நமது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களிலிருந்து தடுக்கிறது. எனவே மழைக்காலத்தில் தினமும் க்ரீன் டீ அருந்தி வர சருமம் இளமையாகவும், பொலிவாகவும் இருக்கும்.
லெமன் ஜூஸ் : குளிர்காலத்திலும் நீரேற்றமாக இருப்பது அவசியமானதாகும், எனவே அதற்கு எலுமிச்சை ஜூஸ் சிறந்த பானமாக இருக்கும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நமது சரும அழகை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் எலுமிச்சை ஜூஸ் கிருமிகள் மற்றும் பூஞ்சை தொற்றுகளுடன் போராடுவது மட்டுமல்லாமல், நமது சருமத்தின் பொலிவையும் மீட்டெடுக்கிறது. எனவே தினமும் அல்லது வாரம் மூன்று முறை எலுமிச்சை ஜூஸ் அருந்துவது நல்லது.
மஞ்சள் பால் : மஞ்சள் பால் ஒரு பழமையான ஆரோக்கியம் நிறைந்த திரவ பானமாகும். ஒவ்வொரு பருவகாலங்களிலும் மஞ்சள் பால் பெரும்பாலான வீடுகளில் தினமும் தயாரிக்கும் பானமாக இருக்கிறது. மஞ்சள் பாலை தினமும் அருந்துவதால் இருமல், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைப்பது மட்டுமின்றி, சரும அழகும் மேம்படுகிறது. மஞ்சள் பாலை அருந்துவது மட்டுமின்றி, சருமத்தில் தடவுவதன் மூலம் உடனடி பளபளப்பை பெற முடியும்.
துளசி தேநீர்: துளசி பண்டைய காலங்களில் இருந்தே மருத்துவ பொருளாக இருந்து வருகிறது. துளசியில் ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால் இதனை தேநீர் செய்து அருந்தும் போது சருமத்தில் இருக்கும் வயதான தோற்றத்தை சரி செய்கிறது. துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்துங்கள்.
தேங்காய் தண்ணீர்: தேங்காய் தண்ணீர் மிகவும் இயற்கையான டிடாக்ஸ் பானங்களில் முக்கியமானது. தேங்காய் தண்ணீர் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தேங்காய் தண்ணீரை தொடர்ந்து அருந்தி வந்தால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகள் மறைந்துவிடும்.மேற்கண்ட பானங்களை அருந்தி மழைக்காலத்திலும் பொலிவாக இருங்கள்.