பளபளப்பான முடியைப் பெற உதவும் பல ஷாம்புகள், கண்டிஷனர்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இருப்பினும், தயிரை விட வேறு சிறந்த இது ஒரு இயற்கையான பொருள் எதுவும் இல்லை என்றே கூறலாம். தயிர் அனைவரது வீடுகளிலும் இருக்கும். எனவே, உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க, உங்கள் கூந்தலுக்கு தயிர் பயன்படுத்தலாம். இது உங்களுக்கு சிறந்த முடிவுகளைத் தரும். மேலும் முடிக்கு தயிர் சிறந்த இயற்கை கண்டிஷனர் என்று சொல்லலாம். உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சலை போக்க கூடும். தயிரை மற்ற பொருட்களுடன் கலந்து ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தலாம்.
தயிருடன் எலுமிச்சை மற்றும் தேன் : ஒரு பவுலில் இரண்டு தேக்கரண்டி தயிரை எடுத்து அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். நன்றாக பேஸ்ட் செய்ய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும். இந்த பேஸ்டை உங்கள் முடியின் வேர்களில் தடவி, உங்கள் தலைமுடியை ஷவர் கேப் மூலம் மூடி வைக்கவும். இதை 30 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கூந்தல் பொலிவாகும். பொதுவாக தேன் பயன்படுத்தினால் முடி நரைக்கும் என கூறுவார்கள். ஆனால் தேன் வரண்டு போகாமல் தடுப்பதுடன் முடியை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
தயிருடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் : அரை கப் தயிரில் மூன்று டீஸ்பூன் தேன் மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதனை உங்கள் உச்சந்தலையில் இருந்து நுனி முடிகள் வரை தடவவும். பின்னர் அதை 30 நிமிடங்கள் விட்டுவிட்டு லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி குளிக்கவும். வாரத்திற்கு ஒரு முறை இதை செய்து வந்தால் உங்கள் கூந்தல் மிருதுவாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
தயிருடன் தேங்காய் எண்ணெய் : ஒரு பவுலில் இரண்டு தேக்கரண்டி தயிரை எடுத்து, அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து தலைமுடியில் தடவவும். பின்னர் உங்கள் தலையை சிறிது நேரம் மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு விடுங்கள். சிறந்த முடிவுகளைப் பெற இதனை வாரம் இரண்டு முறை செய்து வரவும். தேங்காய் எண்ணெய் உங்கள் கூந்தலுக்கு தேவையான போஷாக்கை தருகிறது. இது உங்கள் முடி நன்கு வளரவும் உதவுகிறது.
தயிருடன் ஆலிவ் எண்ணெய் கற்றாழை : ஒரு தேக்கரண்டி தயிரை எடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்க்கவும். இந்த கலவையில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை உங்கள் முடிகளில் தடவி இதை 20 நிமிடங்கள் விட்டுவிட்டு ஷாம்பூவைப் பயன்படுத்தி வாஷ் செய்ய வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்துவந்தால் உங்கள் கூந்தல் பொலிவாகும். கற்றாழை கூந்தல் உதிர்வு பிரச்சனையை சரி செய்து பொடுகையும் குறைகிறது, இதனால் பொடுகு பிரச்னை இருப்பவர்கள் தயங்காமல் கற்றாழையை பயன்படுத்தலாம்.
தயிர் மற்றும் முட்டை : நான்கு தேக்கரண்டி தயிரை எடுத்து அதில் ஒரு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து சேர்த்து நன்கு கலக்கவும். இதை உங்கள் தலைமுடி மற்றும் வேர்களிலும் தடவவும். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவ வேண்டும். சிறந்த முடிவுகளுக்கு பெற இதனை மாதத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவது நல்லது. முட்டையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. எனவே முட்டை பயன்படுத்தினால் உச்சந்தலையில் மயிர்க்கால்களை வலுவாக வைத்திருக்க செய்யும்.
தயிருடன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஸ்ட்ராபெர்ரி : ஒரு கிண்ணத்தில் தயிர், தேங்காய் எண்ணெய் மற்றும் ஸ்ட்ராபெர்ரி இவற்றை பேஸ்ட் செய்து எடுத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடிக்கு தடவி ஷவர் கேப் மூலம் மூடி வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் உங்கள் வழக்கமான ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இதனை செய்து வந்தால் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் முடி உதிர்தலும் விரைவில் கட்டுக்குள் வரும்.