சரும ஆரோக்கியத்தை போலவே கூந்தல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. நீளமான, அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. நமது கூந்தல் அழகை கெடுப்பதில் சுற்றுசூழல் மாசுபாடு, கிளைமேட் சேஞ்ச் மற்றும் ஆரோக்கியமற்ற லைஃப்ஸ்டைல் பழக்கங்கள் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன. தலைமுடியை பராமரிக்க வீட்டிலேயே செய்து கொள்ள கூடிய எளிய வழிமுறைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். முடி உதிர்வு, வறட்சி அல்லது குறைவான முடி வளர்ச்சி உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு ஒரே தீர்வாக இருக்கின்றன முட்டைகள்.
இவற்றின் வாசனை மோசமானதாக இருந்தாலும் கூந்தல் அழகை பராமரிக்கும் விஷயத்தில் முட்டை பல அதிசயங்களை செய்து முடியை அழகாக, ஆரோக்கியமானதாகவும் மாற்றும். புரதங்கள், பி வைட்டமின்ஸ், கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்களின் வளமான மூலமாக இருக்கிறது முட்டைகள். முட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் முடி சேதத்தை சரி செய்கிறது மற்றும் இதிலிருக்கும் கொழுப்பு அமிலங்கள் மயிர்கால்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கின்றன. குறிப்பாக முட்டைகளில் இருக்கும் பயோட்டின் முடி வளர்ச்சிக்கு ஒரு வரமாகும். இது முடி உதிர்வை தடுத்து, புதிய முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. முட்டையில் உள்ள புரதம் முடியை மிருதுவாக, பளபளப்பாகவும் மாற்றுகிறது.
முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் மாஸ்க் : ஒரு முட்டையை உடைத்துஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை நன்கு கலக்கவும். சில நிமிடங்கள் நன்கு கலக்கிய பிறகு முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் கலவையை உங்கள் தலைமுடி முழுவதும் சீராக தடவி சுமார் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின் முடியை குளிர்ந்த நீரில் நன்கு அலசவும். இந்த ஹேர் மாஸ்க் உச்சந்தலையின் எண்ணெயை சமநிலையில் வைக்க உதவுகிறது. மேலும் கூந்தலை நீளமாகவும், பளபளப்பாக மற்றும் வலுவாக மாற்றுகிறது.
முட்டை மற்றும் வாழைப்பழ ஹேர் மாஸ்க் : வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் ஒரு முட்டையை சேர்க்கவும். தேவைப்பட்டால் இந்த ஹேர் மாஸ்க்கிலும் கூட நீங்கள் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை கலந்து கொள்ளலாம். இந்த மூன்றையும் சில நிமிடங்கள் நன்கு கலக்கி எடுத்து கொண்டு கூந்தல் முழுவதும் மற்றும் உச்சந்தலையில் நன்றாக தடவி கொள்ளவும். சுமார் 15 நிமிடங்கள் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை நன்கு அலசவும். இந்த ஹேர் மாஸ்க் பி வைட்டமின்ஸ் மற்றும் பொட்டாசியத்தை கூந்தலுக்கு வழங்குவதன் மூலம் வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளித்து அழகாக்குகிறது.
முட்டை மற்றும் ஆனியன் ஹேர் மாஸ்க் : 2 முட்டைகள் மற்றும் ஒரு ஸ்பூன் வெங்காய சாறு ஆகியவற்றை கொண்டு பேஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தலைமுடியில் நன்கு தடவவும். சுமார் அரை மணி நேரம் இந்த பேஸ்ட்டை தலையில் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசவும். வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. இந்த ஹேர்மாஸ்க் புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.