இன்றைய கால கட்டத்தில் சரும பராமரிப்பு என்பது மிக முக்கியமானதாக உள்ளது. பெரும்பாலும் சருமத்தை சிறப்பாக வைக்க ஏராளமான வழிகளை உள்ளன. ஃபேஸ் பேக், கிரீம்கள், லோஷன், மாயூசரைசர் போன்ற பல பொருட்களை வெளிப்புற தோலில் பயன்படுத்துவோம். ஆனால், சருமம் சிறப்பாக இருப்பதற்கு உள்ளிருந்தே அவற்றிற்கு ஊட்டமளிக்க வேண்டும். இதற்கு ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றி வந்தாலே போதும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் தரத்தை பொருத்தும் நமது சரும பாதுகாப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
ஆரோக்கியமான உணவுகள் பொலிவான முகத்தை தரும். மேலும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள், வயதான தோற்றம் ஆகியவற்றைப் போக்கும். அதே போன்று நகத்தின் தன்மையையும் மேம்படுத்த உதவும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆரோக்கிய உணவுகள் முழு உடலையும் ஈரப்பதமாக வைக்கும். எனவே நீங்கள் எப்போதும் பொலிவாக இருக்க இது வழி செய்கிறது. குளிர் காலத்தில் நல்ல சரும பாதுகாப்பை பெற என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
போதுமான அளவு தண்ணீர் : தண்ணீரானது நம் அன்றாட உணவில் மிக முக்கியமான ஒன்றாகும். நம் உடலுக்கும் தோலுக்கும் தேவையான நீர்ச்சத்தைத் தருகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்கும். இப்படி செய்யாவிட்டால் வறண்ட, சுருக்கங்கள் கொண்ட வயதான சருமத்தை உருவாக்கி விடும். மேலும், குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால், நீரிழப்பு ஏற்பட்டு சோர்வான உணர்வை தரும்.
கொழுப்பு அமிலங்கள் : வால்நட், ஆளி விதைகள் போன்ற நட்ஸ் வகைகள் சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களையும் சாப்பிட்டு வரலாம். இவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும். இந்த வகை கொழுப்புகள் சருமத்தின் இயற்கையான எண்ணெய் உற்பத்தியை சீராக வைக்கிறது. முக்கியமாக உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து, இளமையான தோற்றதை தருகிறது.
கேரட் : கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் நிறைந்துள்ளது. இது புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. குளிர் காலங்களில் சூரியனின் ஒளி அதிகமாக இல்லை என்றாலும், புற ஊதா கதிர்கள் வெளிப்பட்டு தான் கொண்டிருக்கிறது. கேரட்டில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் ஆண்ட்டி ஆக்சிடென்ட்ஸ் உள்ளது. இவை வறண்ட சருமம் மற்றும் சீரற்ற தோல் பிரச்சினைகளை முற்றிலுமாக தடுக்கிறது.
சிட்ரஸ் பழங்கள் : ஆரஞ்சு, டேன்ஜரின், கிரேப் ஃப்ரூட் மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சருமத்தை புத்துணர்வுடன் வைக்கும். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் குளிர் காலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த வழி செய்கிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு : இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைக்கிறது. இதில் அதிக அளவு பீட்டா கரோட்டின் உள்ளது. இது சருமத்தை ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல் உள்ளிருந்து பொலிவு பெற செய்கிறது. இவற்றுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சிறிய நோய்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.