தினசரி முகத்தை தவறாமல் கழுவுவது சருமத்தை சுத்தமாக, ஹைட்ரேட்டாக மற்றும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க செய்ய கூடிய மிகவும் அடிப்படையான, எளிமையான மற்றும் பயனுள்ள வழியாகும். அதே போல முகத்தில் உள்ள அழுக்குகள், அசுத்தங்கள் மற்றும் அதிக எண்ணெய்யை நீக்க ஃபேஸ் வாஷ் உபயோகிப்பது தோல் பராமரிப்பு நடைமுறையில் வழக்கமான ஒன்றாகும்.
சருமத்தை சுத்தம் செய்ய ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும் போது செய்யக்கூடிய சில பொதுவான தவறுகள் உள்ளதாக தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார் பிரபல தோல் மருத்துவர் ஆஞ்சல் பந்த். மேலும் அவர் ஃபேஸ் வாஷ் போன்ற தயாரிப்புகளை பயன்படுத்தும் போது செய்யப்படும் பொதுவான சில தவறுகளையும், அவற்றை தவிர்ப்பதற்கான டிப்ஸ்களையும் ஷேர் செய்துள்ளார்.
வறண்ட சருமத்தில் நேரடியாக ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது... பலரும் சருமத்தில் அப்படியே நேரடியாக ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துகிறார்கள். வறண்ட சருமத்தில் நேரடியாக ஃபேஸ் வாஷ் பயன்படுத்த கூடாது. எப்போது முகத்தில் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துகிறீர்களோ அதற்கு முன் முகத்தை முழுவதும் ஈரப்படுத்தவும். இது நீங்கள் பயன்படுத்தும் ஃபேஸ் வாஷ் சருமத்தில் ஒரே இடத்தில் குவியாமல், முகம் முழுவதும் சரியாக மற்றும் சமமாக பரவுவதை உறுதி செய்யும். இதனால் சுத்தமான மற்றும் தெளிவான சருமம் கிடைக்கும் என்கிறார் ஆஞ்சல் பந்த்.
அதிகமாக அல்லது மிக குறைந்த அளவை பயன்படுத்துதல்: எந்த ஒன்றையும் அதிகமாக அல்லது குறைவாக பயன்படுத்துவது தேவையற்ற விளைவுகளுக்கு காரணமாக இருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஃபேஸ் வாஷின் அளவு சரியாக இருக்க வேண்டும். அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க கூடாது. சருமத்தை சுத்தம் செய்ய அதிக ஃபேஸ் வாஷ் தேவையில்லை, ஒரு சிறிய நாணயம் அளவிலான ஃபேஸ் வாஷ் போதுமானது. அதிக ஃபேஸ்வாஷ் பயன்படுத்துவது சருமத்தை வறண்டு போக வைக்கும்.
சீக்கிரமே முகத்தை கழுவுவது... தோல் நிபுணரின் கூற்றுப்படி முகத்தில் ஃபேஸ் வாஷ் தடவிய பிறகு உடனடியாக கழுவி விட கூடாது. உங்களுக்கு ஆயில் ஸ்கின் என்றால் சாலிசிலிக் அமிலம் சார்ந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது சிறப்பு. ஆனால் ஃபேஸ் வாஷ் போட்ட உடனே முகத்தைக் கழுவ வேண்டாம். அதில் உள்ள மூலப்பொருள் சருமத்தில் வேலை செய்ய குறைந்தபட்சம் 2 நிமிடம் நேரம் கொடுக்க வேண்டும்.
டவலால் அழுத்தி தேய்ப்பது... ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவிய பிறகு எப்போதுமே ஒரு சாஃப்டான துண்டு அல்லது டவலை பயன்படுத்தி முகத்தில் இருக்கும் அதிகப்படியான தண்ணீரை மட்டும் துடைக்கவும். அழுத்தி துடைக்க தேவையில்லை. ஏனென்றால் நீங்கள் அடுத்து அப்ளை செய்ய போகும் மாய்ஸ்சரைர் நன்றாக வேலை செய்ய சருமம் சிறிது ஈரமாக இருப்பது அவசியம்.
மாய்ஸ்சரைசரை உடனடியாக பயன்படுத்தாமல் விடுவது.. மாய்ஸ்சரைசர் இல்லாமல் எந்த தோல் பராமரிப்பு நடைமுறையும் முழுமையடையாது. முகத்தை கழுவிய உடனேயே மாய்ஸ்சரைசிங் செய்வது முக்கியம் என்கிறார் ஆஞ்சல் பந்த். மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். ரெட்டினோல் அல்லது சாலிசிலிக் அமிலம் சார்ந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்துபவர்கள் சருமத்தில் தண்ணீர் வற்றும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.