தன் வாழ்நாளிலேயே மிகப்பெரிய சிறப்புக்குரிய நாளாக இருக்கப் போகும் திருமண நாளுக்கு ஒவ்வொரு பெண்ணும் நிச்சயமாக கனவுகளோடு காத்திருப்பார்கள். அன்றைய தினம் எல்லோரையும் ஈர்க்கும் வண்ணம் தனது தோற்றம் இருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் கனவுகளாக இருக்கும். இதற்காக பல்வேறு அழகு சிகிச்சைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றை திருமணத்திற்கு சில நாட்கள் முன்பாக பயன்படுத்த தொடங்குவார்கள்.
அதேசமயம், சரும பராமரிப்பு மற்றும் அழகு சார்ந்த சிகிச்சைகளை நீங்கள் ஓவர்லோடு செய்து விடக்கூடாது. இது கடைசி நேரத்தில் உங்களுக்கு எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தி விடக் கூடும். கடைசி நிமிடத்தில் அவசர, அவசரமாக சில சிகிச்சைகளை செய்து கொள்வதால் உங்கள் சருமம் பளபளப்பாகவும், தூய்மையானதாகவும் காட்சி அளிப்பதற்கு பதிலாக, வேறுசில பெரும் பிரச்சனைகளை உங்களுக்கு கொண்டுவந்து சேர்த்து விடும். ஆகவே, எந்த ஒரு முயற்சி என்றாலும் திருமணத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பாக நீங்கள் தொடங்கிவிட வேண்டும். இதுமட்டுமல்லாமல் உங்கள் உடலுக்கு பழக்கமில்லாத புதிய பொருட்களை பயன்படுத்துவதால் உங்களுக்கு அலர்ஜி ஏற்படக்கூடும்.
பிளீச் மற்றும் பேசியல் : திருமணம் நெருங்கிவரும் சமயத்தில் நீங்கள் பிளீச்சிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது உங்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எதிர்மறையான பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் அது மறைவதற்கு மூன்று நாட்கள் ஆகலாம். ஆகவே, உங்கள் திருமணத்திற்கு 8 வாரங்கள் இருக்கும் சமயத்திலேயே இதை நீங்கள் முயற்சித்து விட வேண்டும். இதில் உங்கள் சருமத்திற்கு பிளீச்சிங் ஒத்து வருகிறது என தெரியவந்தால் திருமணத்திற்கு 10 நாட்கள் முன்பாக அதை மீண்டும் நீங்கள் செய்து கொள்ளலாம். இதேபோன்று திருமணத்திற்கு ஒரு நாள் அல்லது மூன்று நாட்கள் முன்பாக ஃபேசியல் செய்யக்கூடாது. ஏதேனும் உங்களுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அதனால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.
கரும்புள்ளி அல்லது வெள்ளைப் புள்ளிகளை நீக்குதல் : ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன்பாக தனது முகம் பொலிவாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். இருந்தாலும் திருமணத்திற்கு ஒரு சில நாட்கள் முன்பாக முகத்தில் உள்ள கரும்புள்ளி அல்லது வெள்ளைப் புள்ளிகளை அகற்றும் நடவடிக்கைகளை நீங்கள் கைவிட வேண்டும். ஏனென்றால் இது உங்கள் முகத்தில் ஏதேனும் ஒரு அடையாளம் அல்லது தழும்பு ஆகியவற்றை கொண்டு வந்து சேர்த்து விடும். ஆகவே இந்த சிகிச்சையை நீங்கள் 10 நாட்களுக்கு முன்பாக எடுத்துக் கொள்வது நல்லது.
வீட்டு சிகிச்சை முறைகளைக் கைவிட வேண்டும் : வீட்டிலேயே தயார் செய்யப்படும் சில ஃபேஸ் மாஸ்க் வைத்து உங்கள் முகத்திற்கு அழகூட்டும் நடவடிக்கைகளை பாதுகாப்பானது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதற்கு முன்பு நீங்கள் முயற்சி செய்திராத ஒன்றை புதிதாக செய்ய வேண்டாம். ஏனென்றால், இது உங்களுக்கு எரிச்சல், அரிப்பு போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்திவிடக் கூடும்.