பதின்ம வயதில் துவங்கும் முகப்பரு பிரச்சனை வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கிறது. இதனால் சிலருக்கு மனதளவில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு தங்களது அழகின் மீது சந்தேகம் ஏற்பட்டு விடும். முகப்பருவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான் இந்த பிரச்சனையின் வீரியம் முழுமையாக புரியும். ஆனால் இனி இதைப் பற்றி கவலை கொள்ள தேவையில்லை. முகப்பருவை சரி செய்ய முக்கியமான சில வழிமுறைகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதைப் பற்றிய தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான கேட்டரி ஸ்டூவர்ட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.
அதில் முக்கியமாக நம்முடைய சருமத்தில் சூரிய ஒளி படுமாறு பார்த்துக் கொள்வதின் மூலம் முகப்பருக்களில் இருந்து விடுதலை பெறலாம் என புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதே நேரத்தில் அதிகப்படியான சூரிய ஒளி இல்லாமல் காலை நேரங்களில் சூரியன் உதயமாகும் நேரத்தில் வெளிப்படும் சூரிய ஒளி நம் சருமத்தின் மீது படுமாறு பார்த்துக் கொள்வதின் மூலம் முகப்பருக்களை நீக்குவது மட்டுமின்றி பலவித நன்மைகளும் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். சூரிய ஒளி எப்படி முகப்பருக்களோடு தொடர்புடையது என்று ஆச்சரியமாக உள்ளதா?
கார்டிசால் : சூரிய ஒளி நம் கண்களில் படும்போது அது உடனடியாக கார்டிசால் எனப்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை விடுவிக்கிறது. கிட்டத்தட்ட 32-45 நிமிடங்கள் வரை இந்த கார்டிசால் ஹார்மோன்கள் சுரக்கின்றன. ஒருவேளை இந்த கார்டிசால் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரந்தால் அவை சருமத்தில் முகப்பரு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. சூரிய ஒளியினால் இந்த கார்ட்டிசால் சரியான அளவில் சுரப்பதால் முகப்பரு உருவாவது தடுக்கப்படுகிறது.
ஆழ்ந்த உறக்கம் : நாம் ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்ளும் போது ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. ஒருவேளை சரியான அளவு உறக்கம் இல்லாத போது கார்டிசால் என்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் அளவு அதிகரித்து பல்வேறு உபாதைகளை உண்டாக்குகிறது. இதனால் ஸீபம் எனப்படும் முகப்பருவிற்கு காரணமான மெழுகு போன்ற எண்ணெய் சுரப்பி அதிகரித்து முகப்பரு உண்டாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலும் சரியான உறக்கமின்மையால் வறண்ட சருமம், முகப்பரு, எரிச்சல் ஆகியவையும் ஏற்படலாம். இந்த பிரச்சினையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பதன் மூலம் தூக்கத்திற்கு காரணமான ஹார்மோன்களை கட்டுப்படுத்தி சரியான அளவில் தூங்குவதற்கும் நேரத்திற்கு எழுவதற்கும் உதவுகிறது.
இதைத் தவிர ஹார்மோன் சுரப்பிகள் ஆரோக்கியமாக வேலை செய்வதற்கும் வைட்டமின் டி உதவுகிறது. இவை இரண்டுமே முகப்பரு பிரச்சனைக்கு காரணமாக இருப்பதால் இவை இரண்டில் ஏதேனும் ஒன்று சரிவர இயங்காமல் போனாலும் முகப்பரு உண்டாகிறது. இதை தவிர்க்க சூரிய ஒளியில் நம் சருமத்தில் படுமாறு பார்த்துக் கொள்வதின் மூலம் உடலின் வைட்டமின் டி உற்பத்தியை அதிகரிக்க முடியும்.குறைந்தது 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை காலை நேர சூரிய ஒளி சருமத்தின் மீது படுமாறு பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.