அக்குள் கருமை பெரும்பாலானோருக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. கோடை காலத்தில் குளித்தாலும் வியர்வை சுரப்பு அதிகம் இருப்பதால் ஒரு வித துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். மேலும் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் இணைந்து கடுமையான நாற்றம் மற்றும் கருமையை உண்டாக்குகிறது. அதிகப்படியாக கருமை ஸ்லீவ்லெஸ் உடைகள் அணியும் போது மிகவும் சங்கடமாக மாறும், ஆனால் அது தவிர்க்க முடியாதது. இதனை எளிதான வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம், அவை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
தேங்காய் எண்ணெய் : பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் தேங்காய் எண்ணெய் இருக்கும். தேங்காய் எண்ணெய்யில் இயற்கையாக சருமத்தை ஒளிரச்செய்யும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. எனவே இது அக்குள் கருமையை சரி செய்ய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் தேங்காய் எண்ணெய்யை கொண்டு உங்கள் அக்குள்களை மசாஜ் செய்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் சாதாரண நீரில் கழுவி வந்தால் கருமை நீங்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர் : ஆப்பிள் சீடர் வினிகர் கொழுப்பை குறைக்க மட்டுமின்றி இயற்கையான சுத்தப்படுத்தியாகவும் செயல்படுகிறது. இதிலுள்ள அமிலம் அக்குள் பகுதியில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. ஆப்பிள் சீடர் வினிகர், பேக்கிங் சோடா இரண்டையும் ஒன்றாக கலந்து அக்குள் பகுதியில் அப்ளை செய்யவும். அதை ஐந்து நிமிடங்கள் விட்டுவிட்டு, காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் வித்தியாசத்தை காண முடியும்.
ஆலிவ் எண்ணெய் : பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க பண்டைய காலம் முதல் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை, ஒரு டேபிள் ஸ்பூன் பிரவுன் சர்க்கரையுடன் கலந்து அக்குள் பகுதியில் தடவுங்கள். இரண்டு நிமிடம் ஸ்க்ரப் செய்து பின்னர் கழுவி வாருங்கள். இது எக்ஸ்ஃபோலியேட் செய்து கருமையை குறைக்கிறது.
கடலை மாவு, தயிர் : அக்குள் கருமை நீங்க, மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். பின் அக்குளை நீரில் கழுவி, பின் இந்த கலவையை அக்குளில் தடவி உலர்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவவும். பின்பு ஐஸ் கட்டியால் அக்குளை 1 நிமிடம் மசாஜ் செய்யவும்.