உடலின் மிக முக்கியமான உறுப்பு, ஆனால் பலராலும் கவனிக்கப்படாத உறுப்பு எனில் அது தோல்தான். தோல் பராமரிப்பு, தோல் பிரச்சனைகளை கண்டுகொள்வோர் மிகவும் குறைவு எனலாம். அப்படி பொதுவாக பலரும் பாதிக்கப்படும் சருமப்பிரச்சனைகளில் ஒன்று கரும்புள்ளிகள்தான். இது பெரும்பாலும் புற ஊதா கதிர்வீச்சின் வெளிப்பாடு காரணமாக நிகழ்கிறது. இந்தக் கரும்புள்ளிகளை நிறமி கோளாறு என்கிறார் டாக்டர். சுவாதி திரிபாதி, தோல் மருத்துவர். இவர் மஹே கிளினிக்கின் நிறுவனர். இந்த நிறமி கோளாறுகள் புற ஊதாக் கதிர்வீச்சுகளால் தூண்டப்படுகிறது அல்லது அதிகரிக்கச் செய்கிறது என்கிறார். அதோடு நம் முகத்தை அடிக்கடி மறைக்கும் கரும்புள்ளிகள் குறித்த சில விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.
உங்கள் தோலின் நிறத்தை எது தீர்மானிக்கிறது? : மெலனின் என்பது தோலின் நிறத்தை நிர்ணயிக்கும் முதன்மை நிறமி ஆகும். மெலனின் டைரோசினின் நொதி ஆக்சிஜனேற்றம் மூலம் எபிடெர்மல் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. நிறமி கோளாறுகள் பிரச்சனை இந்தியர்களிடையே பொதுவாக காணப்படும் சருமப்பிரச்சனைகளில் ஒன்றாகும். அவை எதெந்த வகைகளில் பாதிக்கிறது என்பதை பார்க்கலாம்.
மெலஸ்மாவின் சரியான காரணம் தற்போது அறியப்படாத நிலையில், புற ஊதா கதிர்வீச்சின் வெளிப்பாடு அல்லது ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தல் , மரபணு முன்கணிப்பு மற்றும் நச்சு கலந்த மருந்துகள் போன்றவை காரணங்களாக கருதப்படுகின்றன. கருப்பை செயலிழப்பு, தைராய்டு மற்றும் பிற காரணிகள் / அல்லது கல்லீரல் நோய்கள் போன்ற நோய்களின் பக்கவிளைவுகளாக மெலஸ்மாவின் தீவிரம் அதிகரிக்கலாம். புற ஊதா கதிர்கள் மெலஸ்மாவின் பாதிப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பிந்தைய அழற்சி ஹைப்பர் பிக்மென்டேஷன் : PIH என்பது நிறமி தோல் கோளாறு ஆகும். பருக்கள் அல்லது சிறிய காயம் ஏற்பட்ட பிறகும் உங்கள் தோலில் உருவாகும் கரும்புள்ளிகள் PIH என்று கூறப்படுகிறது. இது அழற்சி எதிர்வினையின் விளைவாக ஏற்படுகிறது. இந்த PIH கரும்புள்ளிகள் மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை நீடிக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்க்கைத் தரத்தையும் குறைக்கலாம். அவர்களின் அழகு மீது கொண்ட நம்பிக்கையை குறைக்கலாம். இந்த பாதிப்பு அதன் தீவிரத்தை அதிகரிப்பதற்கும் புற ஊதா கதிர்களின் வெளிப்பாடு முதன்மை காரணமாக இருக்கிறது.
லெண்டிஜின்கள் : வெளிர் பழுப்பு முதல் அடர் பழுப்பு நிற புள்ளிகள் முக்கியமாக சூரிய ஒளி படும் பகுதிகளில் ஏற்படும். வயதுக்கு ஏற்ப அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உங்களிடம் அதிக எண்ணிக்கையிலான லென்டிஜின் கரும்புள்ளிகள் இருந்தால், நீங்கள் அதிக நேரம் சூரிய ஒளியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். மேலும் உங்களுக்கு தோல் புற்றுநோய் வருவதற்கான அதிக ஆபத்தும் இருக்கிறது.
பெரியோர்பிட்டல் ஹைப்பர் பிக்மென்டேஷன் : dark circles என்றும் அழைக்கப்படும் பெரியோர்பிட்டல் ஹைப்பர் பிக்மென்டேஷன் (POH) பொதுவாக பலரிடமும் காணப்படும். இது நிரந்தரமாகவும் , சிலருக்கு தற்காலிகமாகவும் இருக்கும். வயதானவர்கள் சிலருக்கு நிரந்தரமாகவும் இருக்கும். இளைஞர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் தற்காலிகமாக வந்து போகும். இதுவும் சூரிய ஒளி படுவதால் அதிகமாகலாம்.