சருமத்தில் சிறிய கொப்பளம் வந்தாலே அதை நம்மால் தாங்கி கொள்ள முடியாது. ஆனால், பலருக்கும் முகத்தில் ஏராளமான பாதிப்புகள் எளிதில் வந்துவிடும். இது போல ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. சருமத்தை சரியாக பராமரிக்காமல் இருந்தால் பல பிரச்னைகள் எளிதாக வந்துவிடும். இதன் விளைவாக கரும்புள்ளிகள், பருக்கள், முகக்கருமை, வடுக்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதில் கரும்புள்ளிகள் நமது முகத்தில் வெளிப்படையாக தெரிய கூடியவை. அதே நேரத்தில், கரும்புள்ளிகளை நீக்க பல வழிகள் உள்ளன. இந்த பதிவில் கரும்புள்ளிகளை நீக்க கூடிய சில வீட்டு வைத்தியங்களை பற்றி பார்ப்போம்.
தக்காளி: தக்காளி மிகச்சிறந்த சரும பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருளாகும். இது உங்கள் முகத்திற்கு இயற்கையான முறையில் பிரகாசத்தை அளிக்கிறது. தக்காளியை சருமத்திற்கு பயன்படுத்தும் போதும், அதை பச்சையாக சாப்பிடும் போதும் பல அற்புதங்களைச் செய்கின்றன. தக்காளி அரைத்து பேஸ்ட்டாக்கி உங்கள் முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காகத் தடவி, 10 நிமிடம் உலர விட்டு, பிறகு கழுவினால் சருமத்தை மென்மையாக்குவதோடு, கரும்புள்ளிகளையும் மறைய செய்யும்.
எலுமிச்சை: பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை எலுமிச்சை நமக்கு தருகிறகு. இதை கொண்டு கரும்புள்ளிகளை நீக்கவும் பயன்படுத்தலாம். எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளன. எனவே இவை கரும்புள்ளிகளை மறைய செய்து முகத்தை பொலிவாக வைக்க செய்கிறது. இது மிகவும் நம்பகமான முடிவுகளை தருவதால் எலுமிச்சையை அழகு சார்ந்த விஷயங்களுக்கு பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.
அலோ வீரா ஜெல்: கற்றாழையில் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் பல மூலப்பொருட்கள் உள்ளன. இது கரும்புள்ளிகளை அகற்றுவதோடு, தோலின் நிறமாற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது ஆண்டிசெப்டிக் தன்மைகளையும் கொண்டுள்ளது. முகத்தில் உள்ள ஈரப்பதத்தை அதிகரிக்கவும் கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. அத்துடன் உங்கள் சருமத்தை மிருதுவாகவும் ஆக்குகிறது.
பப்பாளி:பப்பாளியில் பலவித என்சைம்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. எனவே இவை கருப்புள்ளிகளை நீக்குவதற்கான இயற்கை வழியாக அமைகிறது. பழுத்த பப்பாளியை அரைத்து உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு உலர விடுங்கள். பிறகு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவவும். இந்த வீட்டு குறிப்பை வாரத்தின் எல்லா நாட்களும் செய்து வருவதும் பல நன்மைகளை முகத்திற்கு தர கூடும். அதே போன்று இதை உணவாக சாப்பிட்டாலும், உங்களின் உடலுக்கும் சருமத்திற்கும் அதிக ஆரோக்கியத்தை பெறலாம். பப்பாளியில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளதால், இதை அவசியம் உட்கொள்ளலாம்.
மேற்சொன்ன வழிமுறைகளை பயன்படுத்தி, உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதில் நீக்குங்கள்.