பளபளப்பான கவர்ச்சியான ஆரோக்கியமான சருமத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள். இன்றைய காலத்தில் சரும பராமரிப்பிற்காக என்னென்னவோ வழிமுறைகளை பலரும் கடைப்பிடித்து வருகிறார்கள். கடைகளில் கிடைக்கும் வேதிப்பொருட்கள் அடங்கிய அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது.
ஆனால் இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இயற்கை வழிமுறைகள் மூலம் சரும பராமரிப்பை மேற்கொள்ள முடியும். தினசரி நம் சமையலறைகளில் கிடைக்கும் தக்காளியை கொண்டு நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. இவ்வாறு தக்காளியை கொண்டு சரும ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
தக்காளி மற்றும் சந்தனம் : பளபளப்பான சருமத்தை பெறுவதற்கு அரைத்த தக்காளி உடன் இரண்டு ஸ்பூன் அளவு சந்தனத்தை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். அந்த பேஸ்ட் கெட்டியாக வந்த பிறகு அதனுடன் பாலை சேர்த்து கலக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை அப்படியே வைத்துவிட வேண்டும். உங்களது முகத்தை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவி நாம் தயார் செய்து வைத்த இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்துவிட்டு நன்றாக காய விட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரை வைத்து கழுவி விடலாம். இந்த செயல்முறையை தொடர்ந்து செய்து வர முகம் பளபளப்பாக மாறுவதுடன் முகத்தில் உள்ள தழும்புகளும் சரியாகும்.
தக்காளி மற்றும் முல்தானி மட்டி : தக்காளியை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை ஒரு கிண்ணத்தில் போட்டு இரண்டு டீஸ்பூன் அளவு முல்தானி மட்டி பவுடரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை அதை அப்படியே வைத்து விடவும். பிறகு உங்களது முகத்தை நன்றாக கழுவி நாம் தயார் செய்து வைத்த இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் வரை காயவைத்த பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவி விடலாம். தினசரி இந்த முறையை பின்பற்றி வர முகம் மற்றும் சருமத்தின் பளபளப்பு மிகவும் அதிகரிக்கும். இதைத் தவிர முகப்பருக்களால் உண்டான நுண் துளைகளும் இதனால் சரி செய்யப்படும்.
சருமத்தில் உள்ள நுண்துளைகளை சரி செய்ய உதவுகிறது : நமது சருமத்தில் உள்ள நுண் துளைகளின் மூலம் பல்வேறு விதமான மாசுக்கள், பாக்டீரியாக்கள் ஆகியவை சருமத்திற்குள் ஊடுருவ வாய்ப்புகள் உண்டு. தக்காளியானது இயற்கையாகவே இந்த நுண் துளைகளை சரி செய்யும் தன்மையைக் கொண்டுள்ளதால் வெளிப்புற தொற்றுகளில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்கிறது.